கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air கட்சி விரைவில் நடத்தப்படவிருக்கும் சிறப்புப் பொதுக் கூட்டத்தின் மூலம் கலைக்கப்படும்.
அந்தத் தகவலை அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் கட்சியின் இணையத் தளம் வழி அறிவித்துள்ளார்.
“நாம் எதிர்த்தரப்பை ஆதரிக்கிறோம் என்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தையும் போக்கும் பொருட்டு” கட்சி கலைக்கப்படுவதாக ஜைட் அந்த இணையத்தளத்தில் சேர்த்துள்ள தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இது குறிப்பாக பினாங்கிலும் கெடாவிலும் உள்ள நமது உறுப்பினர்கள் அடிக்கடி வெளிப்படையாக பக்காத்தான் ராக்யாட்டை குறை கூறி வருவதைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்படுகிறது. அவர்களுடைய நடவடிக்கைகள் நாட்டைப் பாதித்துள்ள உண்மையான பிரச்னைகளில் அவர்கள் அக்கறை காட்டவில்லை என்பதையும் எதிர்க்கட்சிகளைச் சங்கடப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதுமே அவர்களின் நோக்கம் என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளது,” என அவர் சொன்னார்.
பிகேஆர் கட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய ஜைட் கீத்தா கட்சியைத் தோற்றுவித்தார். கடந்த மாதம் அந்தக் கட்சிக்கு ஒர் ஆண்டு நிறைவடைந்தது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அந்தக் கட்சியின் மலாக்கா தொகுதி கலைக்கப்பட்டு அதில் இருந்த 60 உறுப்பினர்கள் பிகேஆர் கட்சியில் இணைய முடிவு செய்தார்கள்.