வரி செலுத்தவில்லை என்றால் வாக்குரிமை இல்லையா?, EC-ஐ சாடியது பெர்சே 2.0

வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு வரி செலுத்தாதிருக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதைத்  தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) முன்வைத்துள்ள பரிந்துரை அரசமைப்புக்குப் புறம்பானது என்று தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே 2.0 கூறுகிறது.

இசி பரிந்துரை,  குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று அரசமைப்பு குறிப்பிடுவதைப் புறக்கணிப்பதாக பெர்சே 2.0 ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“மலேசியாவில் வசிக்கும் மலேசியர்களில் பலர் வரி செலுத்துவதில்லை….பணி ஓய்வு பெற்றவர்கள் வரி செலுத்துவதில்லை, ரிம2,500-க்கும் குறைவாக வருமானம் பெறுவோரும் வரி செலுத்துவதில்லை.

“அவர்களையும் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்போகிறோமா?”, என்றந்த அறிக்கை வினவியது.

திங்கள்கிழமை, இசி தலைவர் அப்துல் அசீஸ் முகமட் யூசுப், அமெரிக்காவிலும் இதுபோன்ற விதி உண்டு என்றும் அதன்படி வெளிநாடுகளில் பணிபுரியும் அந்நாட்டுக் குடிமக்கள் வரிசெலுத்தினால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

நாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கும் அடிக்கடி நாட்டுக்கு வந்து போகின்றவர்களுக்கும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றாரவர்..

இசி, தேர்தல் சீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத் தேர்வுக்குழுவிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதனிடையே, பெர்சே 2.0, தன் “எட்டுக் கோரிக்கைகளில் இரண்டரை கோரிக்கைகளை” மட்டுமே இசி ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் இது, அந்த ஆணையத்துக்கு தேர்தல் சீரமைப்பில் உண்மையில் அக்கறையில்லை என்பதைக் காண்பிக்கிறது  என்றும் கூறியது.

இசி, மலேசியர்களின் நம்பிக்கையைப் பெற நினைத்தால் அது சுதந்திரமாக செயல்பட்டு  தேர்தல்கள் சுயேச்சையாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெர்சே 2.0 இயக்கக்குழு குறிப்பிட்டது. 

“இசி, எந்தவொரு அரசியல் எஜமானருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால், மலேசிய மக்களுக்கு மட்டுமே பதில் சொல்லும் பொறுப்பு அதற்குண்டு என்பதை பெர்சே 2.0 நினைவுறுத்த விரும்புகிறது”, என்றந்த அறிக்கை குறிப்பிட்டது.

TAGS: