ஊராட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் EC-க்கு மட்டுமே உண்டு

பினாங்கில் மாநில அரசே ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடதுவது சட்டத்தை மீறிச் செயல்படுவதாகும் என்கிறார் முதலமைச்சர் லிம் குவான் எங்.

ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு என்பதை ஊராட்சி சட்டம் 1971 தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றாரவர்.

அந்தச் சட்டத்தைத் தந்திரமாக மீறலாம் என்று சில தரப்பினர் ஆலோசனை கூறியுள்ளதற்கு லிம் இவ்வாறு பதிலளித்தார். சமூக அமைப்புகளிடம்  ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அப்படித் தேர்தெடுக்கப்படுவோரை மாநில அரசு அம்மன்றங்களில் நியமனம் செய்யலாம் என்றவர்கள் கூறினர்.

“சட்டத்தை மீறக்கூடாது.”, என்று இன்று கொம்டாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் கூறினார்.

ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்பது பக்காத்தான் ரக்யாட்டின் 2008 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால், சுயேச்சையாக செயல்பட்டு ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தினால் அது  மாநில அரசுக்கே ஆபத்தாக முடியலாம் என்றாரவர்.

“அவர்கள் (என்ஜிஓ-கள்)தெரிவித்த ஆலோசனைக்கு நன்றி. இவ்விசயத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருப்பதே மேல்.”

ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு. ஆனால், அதை நடத்த அது தொடர்ந்து மறுத்து வருவது ஏன் என்பதுதான் தமக்குப் புரியவில்லை என்று லிம் கூறினார்.

பினாங்கிலும் செபறாங் பிறையிலும் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கேட்டுக்கொண்டு இசி தலைவர் அப்துல் அசீஸ் முகமட் யூசுப்புக்குக் கடிதம் எழுதியதாக லிம் தெரிவித்தார்.

அதற்கு இசி தலைவர் நீண்ட கடிதம் ஒன்றில் பதிலளித்திருந்தார்.அதில் அவர் ஊராட்சி மன்றத் தேர்தல்களைக் கூட்டரசு அரசால் நடத்தவியலாது என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வகைசெய்யும் சட்டம் இப்போது அமலில் இல்லை என்றாரவர்.

ஆனால், லிம் ஊராட்சித் தேர்தல் சட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றும் அது உண்மையில் 1991-இல் திருத்தம்தான் செய்யப்பட்டது என்றும் கூறினார்.

“அச்சட்டம் மலேசியாவில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு என்பதைத் தெளிவாகக்  குறிப்பிடுகிறது. அப்படியிருக்க இசி தலைவர் அதை நடத்த மறுப்பதுதான் குழப்பத்தைத் தருகிறது.

“ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டும்தான் உண்டு என்பதால் அதன்படி நடக்க வேண்டும் என்று அதனைக் கட்டாயப்படுத்துமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதைத் தவிர பினாங்கு அரசுக்கு வேறு வழியில்லை”, என்றார்.

TAGS: