தமிழக சட்டசபையில் அம்மாவும் கேப்டனும் நேரடி மோதல்!

தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் நேற்று நேரடியாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அப்போது விஜயகாந்த், பேரவையில் தரக்குறைவாக பேசியதாக உரிமைக்குழு விசாரிக்க அவைத்தலைவர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் விஜயகாந்தை, சட்டசபையிலிருந்து 10 நாட்கள் தற்காலிக பணி நிறுத்தம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விஜயகாந்த் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

விஜயகாந்த் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மீதான உரிமைக்குழு எடுத்துள்ள இந்த நடவடிக்கை சர்வாதிகாரமானது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துக் கூற பிற கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது நியாயமானதல்ல என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி விஜயகாந்துக்குத் தடை உத்தரவு வழங்கப்பட்டதைக் கண்டித்து, திமுக வெளிநடப்பு செய்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவுடன் இடதுசாரிக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.