அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து கோடி காட்ட பிரதமர் மறுக்கிறார்

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற முடியும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார்.

“பாரிசான் நேசனல் (பிஎன்) மீது மக்கள் அதிக நம்பிக்கை வைப்பதற்காக இப்போது கூட்டணித் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்,” என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பல அம்சங்களைக் கவனிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

13வது பொதுத் தேர்தலுக்கு வழி விடுவதற்காக அடுத்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற ஆரூடங்கள் பற்றி நஜிப்பிடம் வினவப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

“என்றாவது ஒரு நாள் அவர்கள் சரியான ஆரூடத்தைக் கூறுவார்கள். ஏற்கனவே 11.11.11 (நவம்பர் 11, 2011)ல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர்கள் கூறினர். நான் எதுவும் கூற விரும்பவில்லை. நான் எதனையும் மறுக்கவும் விரும்பவில்லை,” என்றார் நஜிப்.

நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் திரங்கானுவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக நஜிப், ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களுக்கு ஒரே மலேசியா மக்கள் உதவிக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கினார். அந்த நிகழ்வில் திரங்கானு மந்திரி புசார் அகமட் சைட், இளைஞர் விளையாட்டு அமைச்சர் அகமட் சாப்ரி சிக் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

இதனிடையே புதிதாக அமைக்கப்பட்ட கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air பொதுத் தேர்தலில் சோதனை செய்யப்படுவதற்கு முன்பே கலைக்கப்படுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் வியப்படைந்துள்ளார்.

“எந்த ஒரு போராட்டத்திலும் எதிர்த்து நிற்கும் வலிமை இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பது இன்னொரு விஷயமாகும். நமது இலக்குகளை நாம் குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாது,” என்றார் அவர்.

அந்த கீத்தா கட்சியின் உள் விவகாரங்களில் பிஎன் தலையிடாது என்று நஜிப் சொன்னார். என்றாலும் அதன் முன்னாள் உறுப்பினர்களுடைய அடுத்த நடவடிக்கையை பிஎன் அணுக்கமாகக் கவனிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அம்னோவிலும் பிகேஆர் என்ற Parti Keadilan Rakyat-லும் இருந்த ஜைட் இப்ராஹிம், கீத்தா கட்சிக்குத் தலைவர் ஆவார்.

-பெர்னாமா

TAGS: