ஹசான் அலியுடன் சேர்ந்துகொள்வோம், கெடா கித்தா

கித்தா கட்சியை கலைத்துவிடுவதை விட பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியின் தலைமையில் இயங்கும் “மூன்றாம் சக்தி” இயக்கத்துடன் உறவை வளர்த்துக்கொள்வது சிறப்பாகும் என்று கூறுகிறார் அக்கட்சியின் கெடா மாநில தலைவர் ஸமில் இப்ராகிம்.

கட்சி அடிப்படையில் தோற்றுவிக்கப்படாத கித்தா, பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதை விட ஜாத்தியுடன் உறவு வைத்துக்கொள்வது முறையாகும் என்று அவர் கூறினார்.

“நாம் புதிய சக்தியான ஹசானுடன் கலந்துரையாட வேண்டும். கட்சியை கலைக்கக் கூடாது.

“நமது கட்சி சார்பற்ற நிலைப்பாடு உறுப்பினர்களைக் கவர்ந்துள்ளது. பிஎன்னுக்கு சாதகமான எனது சமீபகால அறிக்கைகள் நான் பிஎன்னை ஆதரிக்கிறேன் என்றாகாது”, என்று ஸமில் கூறினார்.

கித்தா விரைவில் கலைப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜைட் இப்ராகிம் விடுத்திருந்த அறிக்கை குறித்து இன்று புத்ராஜெயாவில் கருத்து தெரிவித்த அவர், கித்தா வளர்ந்து வருகிறது, ஜைட் இல்லாமல் அது இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்றார்.

“நிதி உதவியைப் பொறுத்தவரையில், ஜைட்டின் ஆதரவு மிகக் குறைவு…மாநில அலுவலகத்திற்கான செலவில் வெறும் 10 விழுக்காடுதான் அவர் வழங்கினார்”, என்றாரவர்.

“(கட்சியை) கலைப்பதில் ஜைட்டிற்கு சுயநலம் உண்டு”, என்றும் அவர் கூறினார்.

ஸமிலுடன் சிலாங்கூர் கித்தா தலைவர் அஸ்மி ஓத்மான் மற்றும் ஜொகூர் தலைவர் முகமட் ஸைட் முகமட் யுசூப்பும் உடனிருந்தனர்.

TAGS: