தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இளம்பெண் தீக்குளிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி (வயது 19) என்ற இளம் பெண் காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
 
இதுபற்றிய காவல்துறை விசாரணையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள  மூவரின் தூக்கு தண்டனையை எதிர்த்து செங்கொடி தீக்குளித்தாக அவருடைய சகோதரர் தெரிவித்தார்.

இன்று மாலை செங்கொடி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் கடிதமொன்றினை எழுதிள்ளார். அக்கடிதத்தில், 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் செங்கொடி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகிவரும் நிலையில் காஞ்சீபுரத்தில் தமிழச்சி செங்கொடி தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.