ஹசான் அலி: பாஸ் தலைமைத்துவத்தை மதச் சார்பற்ற குழு ஒன்று தனது கட்டுக்குள் வைத்துள்ளது

பாஸ் கட்சித் தலைமைத்துவத்தில் 72 விழுக்காடு மதச் சார்பற்ற குழு ஒன்றின் கட்டுக்குள் இருப்பதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி கூறிக் கொண்டுள்ளார்.

அந்தக் குழு “டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது” என்றும் அவர் சொன்னார்.

பாஸ் தலைமைத்துவத்தில் எஞ்சியுள்ள பகுதியில் சமய அறிஞர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் 13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை வெற்றி கொள்ளும் பேராசையைக் கொண்டுள்ள எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதற்காக கட்சியின் உண்மையான போராட்டத்தைப் புறக்கணிக்கவும் தயாராக இருக்கின்றனர் என்றார் அவர்.

“நான் மதச் சார்பற்ற கல்வியைப் பெற்றவன். ஆனால் எகிப்திலும் ஜோர்டானிலும் கல்வி கற்ற உலாமாக்கள் பாஸ் கட்சியை வழி நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என நேற்றிரவு புக்கிட் நானிங்கில் மூவார் மலாய் மேம்பாட்டு நேர்மை அமைப்பு (பெக்கிம்) ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசினார். அதில் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

தமது நிலையைத் தளர்த்திக் கொண்டு பக்காத்தான் உத்தரவுகளைப் பின்பற்றுமாறு பாஸ் தலைமைத்துவம் தம்மை வற்புறுத்தியதாகவும் ஹசான் அலி தகவல் வெளியிட்டார். சிலாங்கூரில் மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாகத் தாம் கூறிக் கொள்வது மீது சோதனைகளை நடத்துவதற்கு தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து  பாஸ் தலைமைத்துவம் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பாஸ் தலைவர்கள் என்னைப் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். புத்ராஜெயாவை வெற்றி கொண்ட பின்னர் இஸ்லாமியச் சட்டங்கள் அமலாக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.”

இந்த நாட்டின் கட்டுப்பாட்டை பாஸ், டிஏபி, பிகேஆர் பெறுவதற்கு மலாய்க்காரர்கள் அனுமதித்தால் அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள அவர்களது உரிமைகள் கீழறுப்புச் செய்யப்படும் என்றும் ஹசான் அந்த நிகழ்வில் சொன்னார்.

எதிர்த்தரப்புக் கூட்டணி இஸ்லாம், மலாய்க்காரர்கள், மாமன்னர் என்னும் சொற்களைச் செவிமடுக்க விரும்பவில்லை என்றும் அதற்கு நாட்டை ஆளுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் தாராளமான கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

பெர்னாமா