டிஏபி: மசீச பெர்க்காசாவைக் கண்டு அஞ்சுகிறதா ?

பெர்க்காசா ஒர் ‘இனவாத’ இயக்கம் என்பதால் மசீச தனது உறுப்பினர்கள் அதன் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.

மசீச அவ்வாறு தடை விதிக்கா விட்டால் பெர்க்காசாவுடன் அதற்குத் தொடர்புகள் இருப்பது மெய்பிக்கப்பட்டு விடும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மசீச உறுப்பினர்கள் பெர்க்காசா நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளது டிஏபிக்கு ‘அதிர்ச்சியை’ அளித்துள்ளதாக அவர் சொன்னார்.

சுவா விரைவில் தமது முடிவை மாற்றிக் கொள்வார் என்றும் லிம் நம்பிக்கை தெரிவித்தார்.

“பெர்க்காசா நிகழ்வுகளில் மசீச ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதிப்பது, பெர்க்காசாவுடன் மசீச-வுக்கு உள்ள உறவுகளை நிரூபிக்கிறது.”

“அவ்வாறு செய்வதின் வழி முஸ்லிம் அல்லாதாருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கும் எதிராக பெர்க்காசா இனவாத, தீவிரவாத போராட்டத்தை நடத்தி வந்த போதிலும் மலேசிய அரசியலில் அந்த அமைப்பு முக்கியமான பங்காற்ற முடியும் என மசீச அங்கீகரிப்பதாகத் தோன்றுகிறது.’

“பெர்க்காசா நிகழ்வுகளில் தங்களது உறுப்பினர்கள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்குக் கூட துணிச்சல் இல்லாத அளவுக்கு மசீச-வும் சுவாவும் பெர்க்காசாவைக் கண்டு அஞ்சுகின்றார்களா?” என லிம் மேலும் வினவினார்.

‘பெர்க்காசா வெறுப்பை வளர்க்கிறது’

மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக ‘வெறுப்புணர்வை வளர்க்கும்’ பெர்க்காசா நிகழ்வுகளிம் பங்கு கொள்ள தனது உறுப்பினர்களை அனுமதிப்பதால் மலேசிய சீனர்களுடைய நலன்களைத் தற்காப்பதாக மசீச கூறிக் கொள்ளக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

மலேசியா ஜனநாயக நாடு என்பதால் பெர்க்காசா நிகழ்வுகளில் மசீச உறுப்பினர்கள் பங்கு கொள்வதைத் தாம் தடுக்கப் போவதில்லை என நேற்று சுவா கூறியிருந்தார்.

ஜனவரி 29ம் தேதி அங் பாவ்-களுக்குப் (சிவப்பு உறைகள்) பதில் வெள்ளைக் கடித உறைகளில் ரொக்கம் கொடுக்கப்பட்ட பெர்க்காசா சீனப் புத்தாண்டு நிகழ்வில் மசீச ஸ்ரீ தேசா கிளைத் தலைவர் டாக்டர் கொலின் தியூ கலந்து கொண்டதால் மசீச சர்ச்சைக்கு இலக்கானது.

சீனர்கள் பண்பாட்டில் வெள்ளைக் கடித உறைகள் ஈமச் சடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

TAGS: