லினாஸுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆட்சேபம்

அணு எரிபொருள் அனுமதி வாரியம், லினாஸ் சுரங்க நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நேற்று குவாந்தான் தெலுக் செம்பாடாக் கடற்கரையில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.

குவாந்தான் கெபெங்கில் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு (Lynas Advanced Material Plant-Lamp) அணு எரிபொருள் அனுமதி வாரியம் தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த ஆட்சேபம் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை மணி 5 தொடக்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெலுக் செம்பாடாக் கடற்கரையில் கூடத் தொடங்கினர். அவர்கள் லினாஸ் எதிர்ப்பு மஞ்சள், கறுப்பு நிற டி சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலூன்களையும் கொண்டு வந்திருந்தனர்.

காகிதத் துண்டுகளில் தங்கள் விருப்பத்தை எழுதுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் அந்தத் துண்டுகள் பலூன்களில் கட்டப்பட்டன.

“லினாஸை நிறுத்துங்கள், லினாஸ் அணுக் கதிர் வீச்சு? வேண்டாம் நன்றி” என அந்தக் காகிதங்களில் எழுதப்பட்டிருந்தன.

“நச்சுப் பொருளை விரடினால் நமது நாடு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்” என சீன சித்திர மொழியில் எழுதப்பட்ட நீண்ட பதாதை கூட ஒரு பலூனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அந்தப் பலூன்கள் தரையில் கட்டப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் அவை வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

‘போலீஸ் தலையீடு இல்லை’

பொது மக்களுடைய உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் தற்காலிக நடவடிக்கை அனுமதி லினாஸுக்கு கொடுக்கப்பட்டதால் ஆட்சேபம் தெரிவிக்க மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதாக ‘மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லினாஸை நிறுத்துங்கள்’ அமைப்பின் தலைவர் தான் பூன் டீட் கூறினார்.

எந்த அசம்பாவிதமும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததாகவும் அவர் சொன்னார். போலீசாரும் குவாந்தான் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளும் அங்கு காணப்படவில்லை.

கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒர் ஆர்ப்பாட்டத்தின் போது அமலாக்க அதிகாரிகள் ஏற்பாட்டாளர்களுடைய கூடாரங்களை அகற்றிய வேளையில் கலைந்து செல்லுமாறு மக்களுக்கு போலீசார் ஆணையிட்டனர்.

அணு எரிபொருள் அனுமதி வாரியம்  வழங்கிய அனுமதியை மீட்டுக் கொள்ளுமாறு அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலியைக் கேட்டுக் கொள்ளும் கடிதத்தை புதன்கிழமை தமது அமைப்பு அனுப்பும் என்றும் தான் தெரிவித்தார்.

அந்த வாரியம் அவரது அமைச்சு அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்.

“அவர் பதில் சொல்வதற்கு நாங்கள் ஏழு நாட்கள் அவகாசம் கொடுப்போம். அதற்குள் பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் நீதித் துறை மறு ஆய்வுக்கு நீதிமன்றத்துக்கு விண்ணப்பிப்போம்,”என்றார் அவர்.

TAGS: