எதிர்ப்பு இருந்தாலும் கீத்தா கட்சியைக் கலைக்க ஜைட் உறுதி

கீத்தா என்ற Parti Kesejahteraan Insan Tanah Air  கட்சியின் ஐந்து மாநிலத் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தக் கட்சியை கலைக்கும் தமது நோக்கத்தைச் செயல்படுத்தப் போவதாக அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

“அதற்கான தீர்மானம் இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

கீத்தா கட்சியைக் கலைப்பதற்கு தாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என அதன் ஜோகூர், கெடா, பினாங்கு, சிலாங்கூர், சபா மாநிலத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜைட்-டின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் அந்தக் கட்சியைக் கலைக்கும் நோக்கத்திலிருந்து தாம் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுவதை ஜைட், மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் மறுத்துள்ளார்.

கீத்தா கட்சியைக் கலைப்பது பற்றி ஜைட் கடந்த வியாழக்கிழமை கட்சியின் இணையத் தளத்தில் அறிவித்தார். அது குறித்து விளக்கம் அளிப்பதற்காக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஜிஸ் காதிர் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்ட பின்னர் அந்த வதந்திகள் பரவின.

ஜைட் விலக வேண்டும் என தலைவர்கள் விருப்பம்

அந்த அறிவிப்பு ஜைட்-டின் தனிப்பட்ட கருத்தும் எண்ணமும் என்றும்  கட்சி இன்னும் கலைக்கப்படவில்லை என்று மட்டுமே தாம் மாநிலத் தலைவர்களிடம் சொன்னதாகவும் அஜிஸ் சொன்னார்.

“உள்ளூர் தலைவர்கள் கட்சியின் அமைப்பு விதிகளை அறிந்திருக்க வேண்டும். தகுதி பெற்ற உறுப்பினர்களில் முக்கால் பகுதியினர் ஆதரவு இருந்தால் மட்டுமே கட்சியைக் கலைக்க முடியும்,” என்றார் அவர்.

ஜைட் விலக வேண்டும் என கெடா கீத்தா தலைவர் ஜமில் இப்ராஹிம் கேட்டுக் கொண்டது “முட்டாள்தனமானது” என்றும் “அவர் சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் அஜிஸ் சொன்னார்.

கீத்தா கட்சியைக் கலைப்பதில் ஜைட் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ அவரை வெளியேற்றுவதற்கு கட்சியின் உள்ளூர் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது ஜமில் குறிப்பிட்டார்.

“அவரைப் போன்ற தலைவர் ஒருவரைப் பெற்றிருப்பது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஜைட் மரியாதையுடன் கட்சியிலிருந்து வெளியேறி, அவரை வரவேற்க பாஸ் அல்லது பிஎன் முன் வந்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

“அவர் கட்சியிலிருந்து போகா விட்டால் நாங்கள் அடுத்த நடவடிக்கை பற்றி விவாதிப்போம்,” என்றார் ஜமில்.

TAGS: