ஹசன் அலி கூறுவதுபோல் புல்லுருவிகள் கட்சியில் இல்லை-பாஸ் இளைஞர்கள்

பாஸ் இளைஞர் பகுதி கட்சியில் உள்ள புல்லுருவிகளைக் களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசன் அலி கேட்டுக்கொண்டிருப்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கிறார் அதன் தலைவர் நஸ்ருதின் ஹசன்.

நேற்று அவரைத் தொடர்புகொண்டபோது அவர்,“நான் எந்தவொரு தரப்பினரும் சொல்வதைக் கேட்டு செயல்படுவதில்லை.என் போராட்டம் கொள்கைகளை-இஸ்லாமியக் கொள்கைகளை, கட்சிக் கொள்கைகளை-அடிப்படையாகக் கொண்டது”, என்றார்.

கடந்த சனிக்கிழமை ஹசன், பாஸ் இளைஞர்களும் உலாமாக்களும் உள்ளுக்குள்ளிருந்தும் தாம் வெளியிலிருந்தும் “புல்லுருவிகளை”க் களையெடுக்கப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

உலாமா-அல்லாதவர்களே அந்தப் “புல்லுருவிகள்” என்று குறிப்பிட்ட ஹசன், அவர்கள் பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துப்போகும் அரசியலைப் பின்பற்றுவதால் கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

“புல்லுருவிகள்” என்று ஹசன் குறிப்பிட்டது பற்றி வினவியதற்கு, “அப்படிப்பட்ட எவரும் எனக்குத் தென்படவில்லை”, என்று நஸ்ருதின் கூறினார்.

கட்சிக்கு உண்மையாக இருப்பவர்கள் அதில் தொடர்ந்து இருப்பார்கள், அதனிடம் உண்மையான ஈடுபாடு இல்லாதவர்கள் தாமே வெளியில் சென்றுவிடுவார்கள்.அதனால் அவர்களைப் பற்றிக் கவலையுற வேண்டியதில்லை என்றாரவர்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று ஜனவரி 8-இல் பாஸிலிருந்து நீக்கப்பட்ட ஹசன், தாம் விலக்கப்பட்டதற்குக் கட்சியில் உள்ள “புல்லுருவிகள்”தாம் காரணம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

TAGS: