“வரி செலுத்தவில்லை என்றால் வாக்கு இல்லை” எனத் தாம் கூறவில்லை என்கிறார் இசி தலைவர்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் வரி செலுத்துவோர் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என தாம் யோசனை கூறவே இல்லை என இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுடைய தகுதியை நிர்ணயம் செய்யும் போது மற்ற நாடுகள் பின்பற்றுவதைப் போன்ற சில நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என்று மட்டுமே தாம் ஜனவரி 31ம் தேதி யோசனை சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசியர்களும் அஞ்சல் வாக்காளர்களாக தகுதி பெற்றிருக்கவில்லை என்ற நிலையைக் கருத்தில் கொண்டு தாம் அவ்வாறு சொன்னதாகவும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

நேற்று ஷா அலாமில் சிலாங்கூர் மாநில அளவிலான Maulidur Rasul கொண்டாட்டங்களில் உமார் அப்துல் அஜிஸ் விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

சில நாடுகள் தங்கள் குடிமக்கள் அஞ்சல் வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு- அவர்கள் வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அந்தக் கால இடைவெளியில் அவர்கள் தாய்கத்துக்கு வந்து சென்றிருக்க வேண்டும்- என நிபந்தனைகளை விதிக்கின்றன என அவர் சொன்னார்.

சில நாடுகள் அந்த கால இடைவெளியை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்துள்ளன.

“அமெரிக்காவில் அஞ்சல் வாக்காளர்கள் வரி செலுத்துவோராகவும் இருக்கும் என்ற நடைமுறை அமலில் இருந்து வருகிறது என்றும் நான் எடுத்துக் காட்டுக்காகக் கூறினேன். ஆனால் வரி செலுத்துவோர் மட்டுமே வெளிநாட்டு அஞ்சல் வாக்காளர்களாக அனுமதிக்கப்பட வேண்டும் என நான் ஒரு போதும் சொல்லவில்லை.”

‘அஞ்சல் வாக்காளர்களாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்’

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் வரி செலுத்துவோர் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அப்துல் அஜிஸ் கூறியதாக செய்திகள் வெளியான பின்னர் பல தரப்புக்கள் அவரைக் கடுமையாக குறை கூறியுள்ளன.

“வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் வாக்காளர்களாக தங்களைப் பதிந்து கொள்வதற்கு விண்ணப்பம் செய்வதுதான் முக்கியம். அவர்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்காவிட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.”

“அவர்கள் அஞ்சல் வாக்காளர்களாக விண்ணப்பிக்க வேண்டும். அடுத்து நாங்கள் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் இருக்கின்றனர், அந்த கால இடைவெளியில் தாய் நாட்டுக்குத் திரும்பியிருக்கின்றனரா போன்ற நிபந்தனைகளை நாங்கள் பரிசீலிப்போம். நாட்டுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளனர் என்பதையும் தங்கள் பகுதிகளையும் தொகுதிகளையும் அவர்கள் அறிந்துள்ளனர் என்பதையும் உறுதி செய்வது அதன் நோக்கமாகும்.”

“அவர்கள் 15, 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் திரும்பாமல் இருந்து அவர்களை அஞ்சல் வாக்காளர்களாக நாம் அனுமதித்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது, எந்த நாடும் அது போன்ற நிலையை ஏற்றுக் கொள்ளாது.”

வெளிநாட்டு அஞ்சல் வாக்காளர்களுக்கான முன் நிபந்தனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

TAGS: