பெர்காசாவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதை மசீச நிறுத்த வேண்டும்

மசீச, அதன் உறுப்பினர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரை இரண்டாந்தர, மூன்றாம் தரக் குடிமக்களாக மட்டம் தட்டிவைக்கும் நோக்கம் கொண்ட பெர்காசாவின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிஏபி வலியுறுத்தியுள்ளது.

மலேசியர் எவரும் பெர்காசாவுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தவறு என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“மசீச போல் அல்லாது டிஏபி அதன் உறுப்பினர் எவரும் பெர்காசா நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அனுமதிக்காது.மீறி கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்”, என்றவர் எச்ச்சரித்தார்.

லிம்,இன்று இரண்டாவது நாளாக தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

நேற்று அவர் இதேபோன்ற கோரிக்கை விடுத்தது குறித்துக் கருத்துரைக்க மறுத்த மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,அதற்குப் பதிலாக பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில் லிம் அவரது பணிகளைச் சரிவரச்  செய்யவில்லை  என்று குறை கூறினார்.

பெர்காசா நடத்திய சீனப் புத்தாண்டு உபசரிப்பு ஒன்றில், மசீச ஸ்ரீ தேசா கிளைத் தலைவர் டாக்டர் கோலின் தியோ கலந்துகொண்டதுதான் மசீசமீது குறைகூறப்படுவதற்குக் காரணமாக இருந்தது. 

அந்நிகழ்வில், மேடை ஏறி இப்ராகிம் அலியின் பேச்சை மொழிபெயர்த்ததுடன் பெர்காசா தலைவர்களுடன் செய்தியாளர் கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்துகொண்டார். அத்துடன் நிற்கவில்லை, அவர்களுடன் சேர்ந்து வெள்ளைக் கடித உறைகளில் அங் பாவ் பொட்டலங்களையும் எடுத்து வழங்கினார்.

வெள்ளைக் கடித உறை சீனர்களைப் பொறுத்தவரை ஒரு விலக்கப்பட்ட பொருளாகும். ஈமச் சடங்கின்போது மட்டுமே அவர்கள் அதைப் பயன்படுத்துவது வழக்கம்.

தாம் கலந்துகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் வெள்ளைக் கடித உறை விவகாரம் குறித்து மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியதாக லிம் கூறினார்.

“பெர்காசாவின் செயலைக் கண்டிக்காத பிரதமர் நஜிப் மீதும் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.

ஸ்ரீசித்தியாவில், சிலாங்கூர் பிஎன் நடத்திய சீனப்புத்தாண்டு விருந்தில், பிஎன் அடையாளச் சின்னம் கொண்ட வெள்ளைக் கடித உறைகளில் அங் பாவ் விநியோகம் செய்யப்பட்டது என்பதால் நஜிப்பால் பெர்காசாவைக் கண்டிக்க முடியவில்லை.

“அங்கு வெள்ளைக்  கடித உறைகளில் அங் பாவ் வழங்கப்பட்டதை கிளானா ஜெயா மசீச தொகுதித் தலைவர் ஒங் சோங் ஸ்வென் மறுக்கவில்லை.

“அது உண்மையாக இருக்குமானால், பிஎன் சீனச் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இது போன்ற தப்பான பழக்கங்களை நிறுத்த வெண்டும்”, என்றார்.

TAGS: