பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் உறுதியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு அது முக்கியமனது அல்ல என உத்துசான் மலேசியா ஆசிரியர் சுல்கிபி பாக்கார் கூறுகிறார்.
அதற்கு அப்துல் ஹாடியைக் காட்டிலும் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டுக்கு அதிகச் செல்வாக்கு இருப்பதே காரணம் என அவர் அந்த நாளேட்டில் எழுதியிருக்கிறார்.
“பாஸ் ஆதரவாளர்கள் அப்துல் ஹாடியைக் காட்டிலும் நிக் அஜிஸைப் போற்றுவதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது. நிக் அஜிஸ் படம் பொறிக்கப்பட்ட கார் வில்லைகள், டி சட்டைகள், நினைவுப் பொருட்கள் மட்டுமே உள்ளன,” என்றார் அவர்.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என அப்துல் ஹாடி அறிவித்த போது அதனை மறு ஆய்வு செய்யுமாறு கட்சி உறுப்பினர்களிடமிருந்து நிறைய வேண்டுகோட்கள் வரவில்லை என்பதும் அவர் வலிமையான தலைவர் இல்லை என்பதைக் காட்டியது.
“அவர்களைப் பொறுத்த மட்டில் அப்துல் ஹாடி மீட்டுக் கொண்டால் பாஸ் கட்சிக்கு எந்த இழப்போ ஆதாயமோ இல்லை. திரங்கானிவில் மட்டும் அவர் வலுவாக இல்லை, தேசிய ரீதியிலும் அப்படித் தான்.”
‘ஆன்மீகத் தலைவர் அவரை மறைக்கிறார்’
“இதுகாறும் பாஸ் அடைந்துள்ள புகழுக்கு நிக் அப்துல் அஜிஸின் நடவடிக்கைகளே காரணம் அப்துல் ஹாடி அல்ல. நிக் அஜிஸ், அப்துல் ஹாட்டியைக் காட்டிலும் புகழ் பெற்றவர்,” என்றும் சுல்கிபி சொன்னார்.
அப்துல் ஹாடியின் பதவியை ஏற்றுக் கொள்ள பொருத்தமான உலாமாக்கள் இல்லாததால் கட்சி அவர் தொடர்ந்து தலைவராக இருப்பதை பாஸ் விரும்புகிறது என்றும் அவர் எழுதியுள்ளார்.
“நாம் பாஸ் தலைமைத்துவத்தைப் பார்த்தால் அப்துல் ஹாடி மட்டுமே ஒரே ஒரு உலாமா. துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் ஆகிய அனைவரும் தொழில் நிபுணர்கள்.”
பாஸ் கட்சியில் உலாமாக்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகின்றனர். அதனால்தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அப்துல் ஹாடி கூறியிருக்க வேண்டும் என சுல்கிபி சொன்னார்.
“டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் பாஸ் ஒத்துழைக்கும் வரை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற அப்துல் ஹாடியின் முடிவு அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லாதது.”
அப்துல் ஹாடி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தாம் எண்ணவில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். ஆனால் நிக் அப்துல் அஜிஸ், பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் கேட்டுக் கொண்ட பின்னர் அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டார்.