இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் பிரதமர்

மலேசிய இந்துக்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது “நம்பிக்கை” வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த நம்பிக்கையைக் கொண்டு அரசாங்கம் அந்த சமூகத்துடன் நம்பிக்கை’ சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த சமூகம் சவால்களைச் சமாளிக்கவும் சிறந்த வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கும் உதவ முடியும் என்றார் அவர்.

“அந்த சமூகத்துக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அவர்களுடைய கனவுகள் நிறைவேறுவதற்கு  தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்,” என தைப்பூசத் திருவிழாவை ஒட்டி  www.1malaysia.com.my என்ற தமது வலைப்பதிவில் சேர்த்துள்ள செய்தியில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

நேர்த்திக் கடனைச் செலுத்துவதையும் தியாகத்தையும் தைப்பூசம் குறிப்பதாக கூறிய நஜிப், அந்தத் திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவதாகச் சொன்னார்.

சிறந்த வாழ்க்கைக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கும் தைப்பூசத்தின் போது பலர் பிரார்த்தனை செய்வர் என்றார் அவர்.

“தமக்கும் தாம் நேசிக்கின்றவர்களுக்கும் நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கு முன்னேற்றம் காண வேண்டும் என விழைவது அடிப்படை மனித இயல்பாகும்.”

முன்னேற்றத்துக்கான உணர்வுகளை அரசாங்கம் அறிந்துள்ளது, புரிந்து கொண்டுள்ளது என்றார் பிரதமர்.

மலேசியாவில் தைப்பூசத்தைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தமது வாழ்த்துக்களை நஜிப் அந்தச் செய்தியில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“மலேசிய இந்துக்கள் இந்த புனிதமான நாளைக் கொண்டாடும் வேளையில் நாம் மீண்டும் ஒரு முறை பல தரப்பட்ட பண்பாடுகளையும் பாராட்டுவோம்,” என்றும் அவர் எழுதியுள்ளார்.

TAGS: