MACC விசாரணை இறுதிக் கட்டத்தில், ஷாரிஸாட் விசாரிக்கப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் விரைவில் சமர்பிக்கும்.

எம்ஏசிசி விசாரணைகள் ‘இறுதிக் கட்டத்தில்’ இருப்பதாக அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் முஸ்தாபார் அலி இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் அந்த விவகாரத்தை அதிகார அத்துமீறல் சம்பந்தப்பட்ட 2009ம் ஆண்டுக்கான எம்ஏசிசி சட்டத்தின் 23வது பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளோம்.”

எம்ஏசிசி பிப்ரவரி மாத இறுதிக்குள் தனது விசாரணையை முடித்துக் கொள்ளுமா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த போது முஸ்தாபார் அவ்வாறு கூறினார்.

எம்ஏசிசி சட்டத்தின் 23வது பிரிவு, வெகுமதிக்காக பதவியை அல்லது தகுதியை தவறாகப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்டதாகும்.

அதற்கு வழங்கப்படும் அபராதம் அந்தப் பிரிவுக்கு எம்ஏசிசி சட்டத்தின் 24வது பிரிவில் குறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கூடின பட்சம் 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் வெகுமதியைக் காட்டிலும் கூடுதலாக ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட், அதில் எது கூடுதலோ விதிக்கப்பட முடியும்.

அந்தச் சட்டத்தின் கீழ் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கிர் தோயோ வழக்கைப் போன்று நன்மையாகப் பெறப்பட்ட எந்த சட்டவிரோதச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரமும் எம்ஏசிசி-க்கு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் புலனாய்வை நிறுத்துவதற்கு மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவரும் என்எப்சி தலைவருமான  முகமட் சாலே இஸ்மாயில் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்பட்டது மீது சந்தேகம் எழுந்ததும் எம்ஏசிசி அந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

விசாரணையில் உதவுவதற்காக ஷாரிஸாட்டை அழைப்பது மீது முடிவு ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்றும் முஸ்தாபாரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், விசாரணைக்கு உதவக் கூடிய யாரும் அழைக்கப்படுவர் என்று கூறினார். அவர் அந்த விவகாரத்தைக் கவனிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார்.

ஷாரிஸாட் அழைக்கப்படுவாரா என அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. “ஆம் தேவை இருந்தால் அவர் அழைக்கப்படுவார்,” என முஸ்தாபார் மறுமொழி கூறினார்.

என்எப்சி, அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட்  எளிய கடனை, தனக்கு நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள கெமாஸில் கால் நடை மய்யத்துக்கு செலவு செய்யாமால் ஆடம்பரச் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியதின் மூலம் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது மீது போலீஸும் எம்ஏசிசி-யும் அதனை விசாரித்து வருகின்றன.

TAGS: