ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது

மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள் நுழைந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஷாரிஸாட் குடும்பம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் மீது நடத்தப்படும் புலனாய்வு தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அரசாங்கம் வழங்கிய எளிய கடனை தவறாகப் பயன்படுத்தியதாக என்எப்சி-யின் தலைவரும்  ஷாரிஸாட்-டின் கணவரான முகமட் சாலே இஸ்மாயில் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

அது தனது இலக்கை அடையத் தவறி விட்டதாக 2010ம் ஆண்டுக்கான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிகேஆர் தலைவர்கள் 250 மில்லியன் ரிங்கிட் கடனை கால் நடை வளர்ப்பு சம்பந்தப்படாத கொள்முதல்களுக்குப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தினர்.

கோலாலம்பூரில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்கியதும், புத்ராஜெயாவில் நிலம் வாங்கியது, ஆடம்பரக் கார் ஒன்றை வாங்கியது ஆகியவை அந்தக் கொள்முதல்களில் அடங்கும்.

சிங்கப்பூரில் 34.6 மில்லியன் ரிங்கிட் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்குவதற்கு ஷாரிஸாட் குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கம் வழங்கிய எளிய கடனை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுவதை பிகேஆர் அண்மையில் அம்பலப்படுத்தியது.

ஷாரிஸாட் எம்ஏசிசி அலுவலகத்துக்கு வந்திருப்பதை அதன் புலனாய்வு இயக்குநர் முஸ்தாபார் அலி உறுதிப்படுத்தினார். ஆனால் மேல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

TAGS: