உங்கள் கருத்து: ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம்: கூடுதல் வரி

நாம் ஏன் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்? நான் ஏற்கனவே வரிகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய சுகாதாரக் கவனிப்புக்காக நான் ஏன் சந்தா செலுத்த வேண்டும்?”

ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும்

கோமாளி: கட்டாயாமா? அந்த ஒரே பராமரிப்பு சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பணம் கொடுக்குமாறு மலேசியர்கள் கட்டாயப்படுத்தப்படுவர். அரசாங்கம் நியமிக்கும் மருத்துவரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அது எனக்கு சர்வாதிகாரமாகத் தோன்றுகிறது.

நான் மாதம் ஒன்றுக்கு 10,000 ரிங்கிட் சம்பாதிக்கிறேன். என் மருத்துவக் கவனிப்புக்கான செலவுகளை என் நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் கடுமையான நோய்களுக்காக காப்புறுதியும் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் நான் என் காப்புறுதிக் கட்டணங்கள் போக கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரிங்கிட் கட்ட வேண்டியிருக்கும்.

நான் நோய் வாய்ப்பட்டால் நான் வேலை செய்யும், வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள என் நிறுவன குழு மருத்துவரிடம் நான் செல்கிறேன். நான் எத்தனை முறை மருத்துவரைப் பார்க்கச் சென்றேன் அல்லது என்ன நோய்களுக்கு காப்புறுதி எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி நான் கவலைப்பட வேண்டியது இல்லை. நான் பயன்படுத்தாத ஒன்றுக்காக நான் ஏன் அவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

நான் கொடுக்கும் வரிப் பணம் ஏற்கனவே அரசாங்க மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு உதவித் தொகையாகச் செல்கிறது. ஆனால் என் குடும்பம் சௌகரியம் காரணமாக தனியார் மருத்துவமனைகளுடைய (அதற்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்) சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

எல்லா மலேசியர்களுக்கும் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் கட்டாயம் என்றால் அது பிரிட்டனில் உள்ள என்எச்எஸ் என்ற தேசிய சுகாதாரச் சேவையைப் போன்று மருந்துகள், அறுவைச் சிகிச்சை, போக்குவரத்துச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

டேவிட் தாஸ்: இந்தத் திட்டம் எப்படி வேலை செய்யப் போகிறது? ஏற்கனவே சுகாதாரக் காப்புறுதிகளும் தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன? அரசாங்க சேவையில் சுகாதாரக் கவனிப்பு ஒரு சகாயமாகும்.  அத்துடன் ஏழை மக்களும் ஒய்வு பெற்றவர்களும் அதற்குச் சந்தா செலுத்த முடியாது.

அனைத்து சுகாதார பயனீட்டுச் சேவைகளுக்கான செலவுகளை தனியார் துறைக்கு மாற்றி விடுவதுதான் அரசாங்கத்தின் நோக்கமா? அல்லது ஏதாவது ஒரு வகையான டோல் கட்டணத்தைப் போன்று வசூலித்து அதற்கு நிதி அளிக்கப்படுமா? அப்படி என்றால் பெரிய அரசாங்கச் சேவையை எப்படிச் சமாளிக்கப் போகின்றீர்கள்?

அரசாங்க மருத்துவமனைகளில் கட்டணங்களை உயர்த்துவதை நான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அத்தகைய விரிவான மாற்றத்துக்கான காரணங்களை விளக்க வேண்டும்.

குவினோபாண்ட்: அந்தத் திட்டத்துக்கு ஒருவர் தாம் உழைத்துப் பெற்ற ஊதியத்தில் 10  விழுக்காட்டை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் மருத்துவரை அல்லது மருத்துகளை அல்லது சிகிச்சையைப் பெறாத வேளையில் அந்தப் பணம் எங்கு போகும்?

நல்ல தொடர்புடையவர்கள் மட்டும் நல்ல மருத்துவர்களிடம் அனுப்பப்பட்டு நல்ல மருந்துகளைப் பெறுவார்களா? மற்றவர்கள் அரைகுறையான மருத்துவர்களிடம் போய், கேள்விக்குரிய மருந்துகளை மட்டும் தாம் பெற வேண்டுமா?

ஒபாமா நிர்வாகம் செய்வதைப் போல கட்டாய சுகாதார காப்புறுதியை அறிமுகம் செய்வது ஒரு விஷயமாகும். அதே வேளையில் அவர் எந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ன மருந்துகளைப் பெற வேண்டும் என நிர்ணயம் செய்வது சர்வாதிகாரமாகும்.

பிஎன் அரசாங்கம் ஏற்கனவே நாம் ஒன்று கூடுவதற்கும் பேசுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நமது சுகாதார கவனிப்பின் தரத்தை நாம் தேர்வு செய்யும் உரிமையைக் கூடக் கட்டுப்படுத்துவது அராஜகமாகும்.

சிறந்த மலேசியா: தயவு செய்து தகவல்களைத் துண்டு துண்டாக கொடுக்க வேண்டாம். மக்களுக்கு முழு விவரங்களைத் தர முடியாவிட்டால் அதற்கு நீங்கள் தயாராகும் வரையில் வாயை மூடிக் கொண்டிருங்கள்.

நம்பாதவன்: நமது நல்ல நாட்கள் இன்னும் வரவில்லை என தமது 2012ம் ஆண்டுக்கான செய்தியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

கார் வாங்கும் போது மலேசியர்கள் கணிசமாக வரி செலுத்துகின்றனர். நாம் இப்போது தரம் குறைந்த சுகாதார காப்புறுதித் திட்டத்துக்கு சந்தா செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம். நாம் விரைவில் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியையும் கொடுக்கப் போகிறோம்.

ஆம் மலேசியர்களுக்கு இன்னும் நல்ல காலம் பிறக்கவில்லை. அதற்குத் தயாராக இருங்கள் சகோதர சகோதரிகளே!

TAGS: