ஜைட்: நான் போட்டியிடுவதற்கு இடம் வழங்க பாஸ் துணைத் தலைவர் முன் வந்தார்

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கு ஒர் இடத்தை வழங்க பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு முன் வந்ததாக கீத்தா கட்சித் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று கூறியிருக்கிறார்.

என்றாலும் முகமட் சாபு, தனிப்பட்ட முறையில் அவ்வாறு முன் வந்ததாக ஜைட் சொன்னார்.

“வலைப்பதிவில் எல்லோரும் ஊகமாக எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் மாட் சாபுவை மட்டுமே காட்ட முடியும். அவர் என்னிடம் மிக நன்றாக நடந்து கொள்கிறார். ஆனால் அது கட்சி முடிவு அல்ல என்று நான் நினைக்கிறேன்.”

ஜைட், இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது இல்லத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பிகேஆர் இடத்தில் போட்டியிடுவதற்கு கீத்தா கட்சியைக் கலைக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட அவர் டிஏபி-யில் சேரக் கூடும் என்றும் கூறப்படுவது பற்றிக் கருத்துரைக்க ஜைட் மறுத்து விட்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜைட்-டுக்கு கோத்தா பாரு தொகுதியை வழங்க மாட் சாபு முன் வந்தார் என்று கீத்தா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதன் பினாங்கு மாநிலத் தலைவர் தான் தீ பெங் கடந்த புதன்கிழமை கூறிக் கொண்டிருந்தார்.

அதன் விளைவாக பாஸ் கட்சி சார்பில் போட்டியிட கீத்தா கட்சியைக் கலைப்பதற்கு 2008ம் ஆண்டு பாசிர் மாஸ் எம்பி இப்ராஹிம் அலி செய்ததைப் போல ஜைட் முயலுவதாகவும் தான் சொன்னார்.

ஆனால் மாட் சாபு அந்தாரா போஸ் என்ற செய்தி இணையத் தளத்துக்கு வழங்கிய தொலைபேசி பேட்டியில் தாம் ஜைட்-க்கு இடம் கொடுக்க முன் வந்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.  அந்த பேட்டி யூ டியூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மேல் விவரங்களைத் தர அவர் மறுத்து விட்டார்.

வரும் தேர்தலில் போட்டியிடத் தாம் எண்ணவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் பிகேஆர் உறுப்பினருமான ஜைட் சொன்னார்.

தாம் போட்டியிடும் சாத்தியம் குறித்து விவரமாக ஆராய்ந்த பின்னர் அந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் போட்டியிட மாட்டேன். அது சாதாரணமானது. நான் ஆராயாமல் அந்த முடிவை எடுக்கவில்லை,,” என்றார் அவர்.

‘சொந்த ரீதியில் வெற்றி பெறுவது சிரமம்’

கடந்த ஆண்டு இறுதியில் தாம் கோத்தா பாரு, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டு மாதம் செலவு செய்து சொந்த ரீதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என ஆய்வு செய்ததாகவும் ஜைட் சொன்னார்.

“ஜைட் இப்ராஹிம் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற முடியுமா என நான் சோதிக்க விரும்பினேன். அது சிரமம் என நான் அறிந்து கொண்டேன். காரணம் நான் அந்தக் கட்சியில் இருக்க வேண்டும், இந்தக் கட்சியில் இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் கூறினர். ஆனால் நான் எந்தக் கட்சியிலும் இணைய விரும்பவில்லை,” என்றார் அவர்.

கீத்தா கட்சியின் கீழ் போட்டியிடுவது சாத்தியமில்லை எனக் கூறிய அவர் சிறிய கட்சி ஒன்றின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவது சிரமம் என்பதை தமது ஆய்வுகள் காட்டியதாகவும் ஜைட் கூறினார்.

“ஆனால் சில அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முன் வந்தால் நான் அதனை மதிப்பீடு செய்வேன்.”

என்றாலும் அந்த வாய்ப்பை பெறுவதற்குத் தாம் குறிப்பிட்ட கட்சியில் சேர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டால் தாம் அதனை நிராகரிக்கப் போவதாகவும் ஜைட் சொன்னார்.

“எனக்கு தேர்தல் இப்போது முக்கியமல்ல. நான் அது குறித்து சிந்திக்கவே இல்லை. எதிர்க்கட்சிகள் நிறைய வெற்றிகளைப் பெறும் என நான் நம்புகிறேன். “

TAGS: