மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என நஜிப்புக்கு அறைகூவல்

குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் எல்லாப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் அலவன்ஸ் கொடுப்பதையும் ஆண்டு நிகழ்வுகளாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

நஜிப், தாம் மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்புவதை நிரூபிக்க அவ்வாறு செய்ய வேண்டும். “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் அதனைச் செய்யக் கூடாது” என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

3.4 மில்லியன் குடும்பங்களுக்கு மொத்தம் 1.8 பில்லியன் ரிங்கிட்டும் 5.5 மில்லியன் மாணவர்களுக்கு மொத்தம் 550 மில்லியன் ரிங்கிட்டும் கொடுக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார். அரசாங்கத்தின் விரயங்களை ஒப்பிடும் போது அந்தப் பணம் பெரிய தொகை அல்ல.

“2000ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் 1077 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.”

“அதைத் தவிர ஏற்கனவே 12 பில்லியன் ரிங்கிட் பெறும் போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல், 52 பில்லியன் ரிங்கிட் பெறும் பூமிபுத்ரா பங்கு மோசடிகள், அண்மைய காலத்தில் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்பான 250 மில்லியன் ரிங்கிட் ஊழல் ஆகியவையும் இருக்கின்றன,” என்றும் லிம் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஊழல் மலிந்த திட்டங்களில் பணத்தை விரயமாக்குவதற்குப் பதில் அந்தப் பணத்தை “அதிகமான பண வீக்கத்தினாலும் குடும்பக் கடன்கள் அதிகரித்துள்ளதாலும் அவசியம் உதவி தேவைப்படும்” மக்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவது நல்லது என்று பாகான் எம்பி-யுமான அவர் சொன்னார்.

அண்மைய காலத்தில் அடிப்படை பொருட்களுடைய விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. அதனால் மில்லியன் கணக்கான மலேசியர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.

சீனி: ஒரு கிலோ சீனி விலை 1 ரிங்கிட் 45 சென்-னிலிருந்து(ஜனவரி 2010) 2 ரிங்கிட் 30 சென் -னாக (மே 2011) அதிகரித்துள்ளது. ஏற்றம் 58 விழுக்காடு,

முட்டைகள்: பி கிரேடு 30 முட்டை விலை 9 ரிங்கிட் (செப்டம்பர் 2010)-லிருந்து 30 முட்டை 10 ரிங்கிட் (இப்போது)

வெங்காயம்: 2010ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் 17 விழுக்காடு விலை ஏற்றம்

சேவை வரி: 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதனால் கூட்டரசு அரசாங்கத்துக்கு கூடுதலாக 720 மில்லியன் ரிங்கிட் வரி வருமானம்

தே தாரெக், பால் கோப்பி: 10 சென் முதல் 20 சென் வரை கூடியுள்ளது (9.1 விழுக்காடு முதல் 18.2 விழுக்காடு ஏற்றம்

மின்சாரக் கட்டணம்: 2011ம் ஆண்டு ஜுன் மாதம் 7.12 விழுக்காடு சராசரி உயர்வு

கார்டினியா ரொட்டி: 5 விழுக்காடு முதல் 14 விழுக்காடு வரை ஏற்றம் (2011)

பண வீக்கம் என்ற விலை ஏற்றத்தால் குடும்பக் கடன்களின் அளவும் கூடியுள்ளது. 2010ம் ஆண்டுக்கான பாங்க் நெகாரா அறிக்கையின் படி- மலேசிய குடும்பக் கடன்களின் மொத்த மதிப்பு 2010ம் ஆண்டு இறுதியில் 581 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 76 விழுக்காடு ஆகும்.

“2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மலேசியக் குடும்பங்களில் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விகிதம் 7.8 விழுக்காடாக இருந்தது. சராசரி குடும்ப வருமானத்தில் கிட்டத்தட்ட பாதித் தொகை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். அதனை வேறு விதமாகச் சொன்னால் நான் கடன்கள் நிறைந்த நாடாக மாறிக் கொண்டிருக்கிறோம்.”

தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதுடன் ஆண்டுதோறும் ரொக்க நன்கொடைகளை வழங்குமாறும் லிம் நஜிப்பைக் கேட்டுக் கொண்டார்.

“அவ்வாறு செய்தால் மட்டுமே மலேசியர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி அவர்களை கௌரவமாக வாழ வைக்க முடியும்,” என்றார் அவர்.

அண்மையில் BR1M என்னும் Bantuan Rakyat 1 Malaysia குடும்பங்களுக்கு ஒரு முறை 500 ரிங்கிட் ரொக்க உதவியும் மாணவர்களுக்கு 100 ரிங்கிட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அண்மையில் நஜிப் அறிவித்தார்.

ஆனால் அது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் தந்திரம் என அதனைக் குறை கூறுகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS: