அம்னோ ஊழல் குறித்து ஹசான் ஊமையாகவும் இருக்கிறார்; செவிடராகவும் இருக்கிறார்

“அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை.”

பிகேஆர், டிஏபி-ய்டன் பாஸ் ஒத்துழைப்பதை ஹசான் அலி சாடுகிறார்

முவாக்: முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி அவர்களே, நீங்கள் இஸ்லாத்துக்காகப் போராடினால் அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் ஏன் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை?

இஸ்லாம் ஊழலை அனுமதிக்கிறதா? இஸ்லாத்தில் இனவாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? மக்களிடம் பொய் சொல்வதை அந்த அற்புதமான மதம் அங்கீகரிக்கிறதா? அரசியல் ஆதாயத்துக்காக மற்ற இனங்களை இஸ்லாத்தை பின்பற்றுகின்றவர்கள் சிறுமைப்படுத்துவதற்கு அனுமதிக்கிறதா?

மக்களிடமிருந்து அம்னோ/பிஎன் திருடுவது குறித்து இது வரை நான் உங்களிடமிருந்து எதுவுமே கேட்கவில்லையே? மக்களை நடப்பு அரசாங்கம் முட்டாளாக்குவது பற்றியும் நீங்கள் ஏன் ஒன்றும் பேசவே இல்லை? ஊழல் நிறைந்த அம்னோ/பிஎன் மோசடிக்காரர்களை ஜெயிலில் போடுவது பற்றியும் ஏன் நீங்கள் பேசவே இல்லை?

ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பம் சம்பந்தப்பட்ட ஊழல் வெளிச்சத்துக்கு வந்தும் ஷாரிஸாட் ஏன் பதவியிலிருந்து விலகாமல் இருக்கிறார் என ஏன் இதுவரை ஒன்றும் சொல்லவே இல்லை?

அல்லாஹ் உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறாரா என்பதை அறிய உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாராஜுன் ஹுடா: நான் ஒரு முஸ்லிம். முதலாவதாக இஸ்லாமிய நாட்டுக்கான போராட்டம், பல இன மலேசியாவில் உண்மை நிலைக்கு உகந்தது அல்ல. எது எப்படி இருந்தாலும் இது மதச் சார்பற்ற நாடு. இஸ்லாம் அதிகாரத்துவச் சமயம் மட்டுமே. இது இஸ்லாமிய நாடு அல்ல.

இரண்டாவதாக இந்த நாட்டில் நடுத்தர நிலையிலும் வறுமையிலும் வாழும் 80 விழுக்காடு மக்களுக்கு பாதுகாப்பு வலயத்தை வழங்க சமூக நல நாடு அவசியமாகும்.

மூன்றாவதாக இஸ்லாமிய நாடு என்ற போராட்டத்தை கைவிட்டதால் முஸ்லிம் அல்லாதாரிடையே பாஸ் மரியாதையைப் பெற்று வருகிறது.

நான்காவதாக மலேசியாவைக் காப்பாற்றுவதற்காக பாஸ் கட்சியும் பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள அதன் தோழமைக் கட்சிகளும் புத்ராஜெயாவை பிடிக்க வேண்டும்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல், போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல், நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் கட்டணங்கள், ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் கொடுக்கப்படுவது, மருத்துவமனை தோல்விகள், மற்ற பல கடுமையான நிதி விரயங்கள் ஆகியவை அந்த உண்மையை மெய்பிக்கப் போதுமானவை.

ஆனால் மலேசியர்களுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஹசானிடம் அறிவும் இல்லை. விவேகமும் இல்லை.

ஐந்தாவதாக டிஏபி முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கும் போராடும் போது அது இஸ்லாத்துக்கு எதிரி என எப்படிச் சொல்ல முடியும்?

ஆறாவதாக பாஸ் தான் சொன்னதை விழுங்க முடியாமல் தடுமாறவில்லை. அது முதிர்ச்சி அடைந்துள்ளது.

விவேகம் அதிகரித்துள்ளது.

இறுதியாக உலகில் இஸ்லாமிய நாடு தன்னை அறிவித்துக் கொண்டுள்ள எந்த நாடு வெற்றி அடைந்துள்ளது என்பதைக் காட்டுங்கள்

உங்கள் அடிச்சுவட்டில்: சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். பாஸ் கட்சியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக நீங்கள் முறையீடு செய்து கொள்கின்றீர்களா இல்லையா என்பது பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.

முஸ்லிம்களைப் போன்று வேடம் தரித்து முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்யும் அந்நிய கிறிஸ்துவ மத போதகர்களுடைய பெயர்களை நீங்கள் எங்களுக்குத் தர வேண்டும்.

மதம் மாறிய முஸ்லிம்களுடைய பெயர்களையும் நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்யவில்லை என்றால் நீங்கள் முழுப் பொய்யர், தகராறுகளை மூட்டுகின்றவர், வேடதாரி எனக் கருதப்படுவீர்கள்.

சரவாக் டயாக்: டிவி3, உத்துசான் மலேசியா ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாக ஹசான் அலிக்கு அடிக்கடி இடம் கொடுக்கப்படுவதைப் பார்க்கும் போது அவருக்கு அம்னோ ஆதரவளிப்பது தெளிவாகத் தெரிகிறது.

பாஸ், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிகேஆர், டிஏபி, கிறிஸ்துவர்கள் ஆகியோரை அவர் இடைவிடாமல் தாக்கிப் பேசி வருவதும் அவருடைய அம்னோ தொடர்பைக் காட்டுகிறது.

நடப்பு தேசிய விலங்குக் கூட மய்யம் சம்பந்தப்பட்ட ஊழல் மீது ஹசான் அலியின் கருத்துக்களை ஊடகங்கள் வினவ வேண்டும். அந்த ஊழல் தொடர்பான அவரது நிலை அம்னோவுடன் அவருக்கு உள்ள உறவுகளையும் அம்பலப்படுத்தி விடும்.

அடையாளம் இல்லாதவன்_3e06: ஹசான் அவர்களே,  நீங்கள் வெறுக்கும் ஒரு மதமான கிறிஸ்துவ சமயத்தின் வேத நூலில் நாங்கள் சொல்வது போல, நீங்கள் ஒரு வெற்றுக் குடம்.

ஆனால் நீங்கள் ஒவ்வொருவரிடமும் சொல்கின்றீர்கள் நீங்கள் இஸ்லாத்தை நேசிப்பதாக. நீங்கள் அதிகாரத்தை மட்டுமே நேசிக்கின்றீர்கள். ஆனால் மக்கள் அதனை உங்களிடம் கொடுக்க விரும்பவே இல்லை.