பெர்சேயின் கோரிக்கைக்கு 88 விழுக்காட்டினர் ஆதரவு

மெர்தேக்கா கருத்து ஆய்வு மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்திற்கான குழு பெர்சே 2.0  இன் கோரிக்கைகளை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் 11க்கும் 27 க்கும் இடையில் 1,207 பேர்களுடன் நடத்திய ஆய்வில் பெரும்பான்மையான மலேசியர்கள் – 88 விழுக்காட்டினர் –  தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மைபடுத்தப்படுவதற்காக மறுஆய்வு செய்யப்படுவதை ஆதரிக்கின்றனர்.

இந்த ஆதரவு இன வேறுபாடுகளைக் கடந்து காணப்படுகிறது. 89 விழுக்காடு மலாய்க்காரர்கள், 85 விழுக்காடு சீனர்கள் மற்றும் 88 விழுக்காடு இந்தியர்கள் தேர்தல் வாக்காளர் பட்டியல் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.

தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட இதர கோரிக்கைகளுக்கும் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளனர். அழிக்க இயலாத மையைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலை கண்காணிப்பது ஆகியவற்றை 70 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர்.

ஆவி வாக்களிப்பை தடுப்பதற்கு அழிக்க இயலாத மை பயன்படுத்தப்படுவதை பெர்சே 2.0 டும் எதிரணியினரும் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும் செலவை ஏற்படுத்தக்கூடிய கைவிரல் ரேகை பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் ஈடுபாடு கொண்டிருந்தது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் யூசுப் கைவிரல் ரேகைப் பதிவு முறை பிரச்னைகளை உள்ளடக்கியது என்பதை சமீபத்தில் ஒப்புக்கொண்டதோடு இரண்டு முறைகள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தேசியநீரோட்ட ஊடகங்களை எதிரணியினரும் பயன்படுத்துவதை 68 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர். தற்போது இந்த ஊடகங்கள் ஆளுங்கூட்டணியின் கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்திலும் இருந்து வருகின்றன.

தேர்தல் சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு பெர்சே 2.0 இன் கோரிக்கைகளைப் போன்றே இருந்தபோதிலும், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 49 விழுக்காட்டினர்தான் பெர்சே 2.0 இன் கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்திருந்தனர்.

அனுதாப அலையின் அளவு

இருப்பினும், 62 அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பான பெர்சே 2.0 இன் ஜூலை 9 பேரணியை அரசாங்கம் கையாண்ட முறையை கிட்டத்தட்ட அரைவாசியினர், 48 விழுக்காடு மலேசியர்கள், ஏற்றுக்கொள்ளவில்லை. 39 விழுக்காட்டினர் அரசாங்க நடவடிக்ககயை ஆதரித்தனர்.

அரசாங்கத்தின் நடத்தை மீது பெரும் அதிருப்தி அடைந்தவர்கள் சீன சமூகத்தினர், 68 விழுக்காட்டினர். அடுத்த நிலையில் 55 விழுக்காடு இந்தியர்கள் இருக்கின்றனர்.

ஆனால், ஜூலை 9 பேரணியை அரசாங்கம் கையாண்ட முறையை பெரும்பாலான மலாய்க்காரர்கள், 57 விழுக்காட்டினர், ஆதரித்தனர். 37 விழுக்காட்டினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெர்சே 2.0 இன் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால், பெர்சேயின் விடாப்பிடியான அழுத்தத்தின் விளைவாக, அரசாங்கம் தேர்தல் சீர்திருத்ததிற்கான நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பைச் செய்தது.

ஆனாலும், தேர்தல் சீர்திருத்தங்கள் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக முறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்க பிரதமர் நஜிப் மறுத்து விட்டார். நாடாளுமன்ற சிறப்புக்குழு மீது இருந்த நம்பிக்கையை இந்த அறிவிப்பு பாழாக்கிவிட்டது.

TAGS: