பத்துமலையில் நடந்தப்பட்ட தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சென்றது இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானது என பேராக் முப்தி அறிக்கை விடுத்துள்ள வேளையில் அந்த வருகை மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இருக்கக் கூடுமென்று கூறி நஜிப் நடவடிக்கையை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி இன்று நியாயப்படுத்த முயன்றுள்ளார்.
“சிலரது புரிந்துணர்வின் படி விசாக தினத்தையும் கிறிஸ்துமஸையும் போன்று தைப்பூசமும் சமய கொண்டாட்டமாகும். முஸ்லிம்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது என என்னிடம் கூறப்பட்டுள்ளது. காரணம் aqidah, syariah விதிகளை மீறுகிறது என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.”
ஆனால் பத்துமலை கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொண்டதை நாம் எல்லா இனங்கள் மீதும் கவனம் செலுத்துகின்ற பிரதமராகத் தாம் பார்க்கப்பட வேண்டும் என அவர் விரும்புவதின் அடிப்படையில் கண்ணோட்டமிட வேண்டும்,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
அதனை விரிவாக எடுத்துரைத்த இப்ராஹிம், நஜிப் “ஒற்றுமை ஒளி விளக்கை” கொண்டு செல்லும் நோக்கத்துடன் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
“சமய கண்ணோட்டம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கு அவருக்கு ஒரு வேளை நேரம் இல்லாமல் போயிருக்கலாம்,” என்றார் அவர். “அவ்வாறு செய்திருந்தால் அவர் தமது கருத்தைக் கூறியிருக்க முடியும்.”
பௌத்த ஆலயங்களில் சமய நிகழ்வுகளில் தாம் கலந்து கொண்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டையும் அந்த பாசிர் மாஸ் சுயேச்சை எம்பி தாக்கிப் பேசினார்.
“நீங்கள் பாஸ் கட்சியினரைக் கேட்டால் அவர் ஆலயங்களில் சமயப் பிரச்சாரம் செய்வதாக சொல்வார்கள். அதனை நிக் அஜிஸ் செய்தால் அது சரி. ஆனால் நஜிப் செய்தால் அது தவறா,” என இப்ராஹிம் வினவினார்.