வாக்காளர் தணிக்கை ஆயிரக்கணக்கான போலிப் பதிவுகளை அம்பலப்படுத்தியது

வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும்.

அந்த போலி வாக்காளர் பதிவுகள் கிட்டத்தட்ட 200,000-ஆக இருக்கும் என தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி) நேற்று கூறப்பட்டது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனமான மிமோஸ் பெர்ஹாட் அந்த தணிக்கையை மேற்கொண்டது. அது தனது முடிவுகளை பிஎஸ்சி-யிடம் விளக்கியது.

இரண்டு மணி நேரம் நீடித்த விளக்கமளிப்பின் போது மிமோஸ் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் வஹாப் அப்துல்லா அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் பிஎஸ்சி தலைவர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி-யும் கலந்து கொண்டார் என நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் அங்கம் பெற்றுள்ள அந்தோனி லோக் கூறினார்.

“ஒரே முகவரியில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட 820 சம்பவங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஒரே இடத்தில் 21-50 வாக்காளர்கள் வரையில் பதிவான 3,254 சம்பவங்களும் 11 முதல் 20 வாக்காளர்கள் வரை உள்ள 6,002 சம்பவங்களையும் மிமோஸ் கண்டு பிடித்துள்ளது.”

“அந்த இடங்களில் இராணுவ முகாம்களும் அடங்கும்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சில கேள்விக்குரிய முகவரிகளில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த முகவரிகளில்  “No 62, Lembah Pantai”,  “E6, Seputeh” ஆகியவையும் அடங்கும்.

தேசியப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து சோதனைகளை மேற்கொள்ள மிமோஸுக்கு பிஎஸ்சி இரண்டு வார அவகாசம் கொடுத்துள்ளதாகவும் லோக் சொன்னார்.

“பிஎஸ்சி அந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மீது ஆழமாக ஆராயவில்லை. மிமோஸ் இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் விளக்கமளிக்கும்.”

785 பேர் அஞ்சல் வாக்காளர்களாகவும் இயல்பான வாக்காளர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

போலி வாக்காளர் பதிவுகள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் வாக்காளர் பட்டியலை முழுமையாக தணிக்கை செய்வது நல்லது என்றும் லோக் வலியுறுத்தினார்.

பிஎஸ்சி பல பொது விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பல பரிந்துரைகளை வழங்கியது. அதில் வாக்காளர் பட்டியலைத் தணிக்கை செய்வதும் அடங்கும்.

அந்தப் பொறுப்பு மிமோஸுக்கு கொடுக்கப்பட்டது.

TAGS: