குத்தகைகளில் பூமிபுத்ராக்களின் ஆக்ககரமான ஈடுபாட்டை வரவேற்கிறோம், சேவியர்

பூமிபுத்ராக்களின் மேம்பாட்டிற்கு உதவும் ரீதியில் பிரதமரும், நிதியமைச்சருமான நஜிப் துன் ராசாக் மலேசிய விரைவு ரயில் சேவை நிர்மாணிப்புத் திட்டத்தில்  800 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள குத்தகைகளை பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது.  இதனால் பூமிபுத்ரா நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பயனடைவதுடன், விரைவு ரயில்  திட்டத்தின் தொழில் நுட்பங்களை பகிர்ந்துக் கொள்ளவும் இது வகைச் செய்கிறது.

மிகவும் போட்டிகரமான இன்றையத் தொழில் சூழலில் இது போன்ற குத்தைகைகளும் தொழில்நுட்ப பறிமாற்றங்களும் பூமிபுத்ரா சமூகத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி இந்நாட்டு மக்களின் தொழில் வல்லமைக்கும் இட்டுச்செல்லும் என்பதால் இதனை பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசு வரவேற்கிறது.

மலேசிய விரைவு ரயில் சேவைத் திட்டம், இந்நாட்டு வளர்ச்சித்திட்டங்களில் ஒரு மைல் கல்லாக அமையக்கூடியது. 2,000 கோடி வெள்ளியில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு வழங்கியுள்ளது போன்ற குத்தகைப் பணிகளை மலேசிய இந்திய குத்தகையாளர்களுக்கும் வழங்கவேண்டும். இந்நாட்டு பொருளாதாரத்தில் மிக நலிவுற்றுள்ள இந்திய சமூகத்தின் பொருளாதார ஏற்றத்திற்கு  இது மிக முக்கிய ஊட்ட சத்தாக இருக்கும்  என்பதால். இத்திட்டத்தில்  இந்தியர்களும் அவர்களின்  பங்குகளைப் பெறுவதை பிரதமர் உறுதி செய்யவேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

பல்வேறு அரசாங்க கொள்கைகள் மற்றும் பாகுபாடான குத்தகை முறைகள் ஆகியவற்றால் இந்திய சமூகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை பிரதமர் நன்கு அறிவார். இது கடந்தக்கால நடைமுறைகளாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஆகவே, மலேசிய விரைவு ரயில் சேவைத் திட்டம் போன்ற ஒரு மாபெருந்திட்டக் குத்தகைகளில் ஈடுப்பட இந்தியர்களுக்கு வாய்பளிக்கப்படுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும். இது தொழிற்துறைகளில் காலடி எடுத்துவைக்க இளைஞர்களுக்கு பெரிய ஊக்குவிப்பாக அமையும் என்பதுடன் தொழிற்நுட்ப பரிமாற்றங்களுக்கும்  வழிவகுக்கும். இதுப்போன்ற வாய்ப்புகள் இந்திய சமூகமும் பொருளாதார இக்கட்டுகளிலிருந்து வெளிவர உதவும் என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: