மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் எனக் கூறப்படும் விவரங்களை அம்பலப்படுத்துவதின் மூலம் இஸ்ரேல் தனது ‘நண்பரான’ எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை மழுங்கடிக்க முயலுகிறது.
இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செர்டாங்கில் கூறியிருக்கிறார்.
“மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தகம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடுவதின் மூலம் இஸ்ரேல் அன்வாருக்கு உதவ முயலுகிறது,” என்றார் அவர்.
“தான் தொடர்பு வைத்துக் கொண்டது அன்வார் ஒருவருடன் மட்டும் அல்ல. மற்றவர்களும் அதனைத்தான் செய்கின்றனர் எனக் காட்டுவதே அதன் நோக்கமாகும்,” என மகாதீர் மேலும் விளக்கினார்.
அன்வார் இஸ்ரேலுடன் நீண்ட காலமாக ‘நல்ல நண்பராக’ இருந்து வந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தாம் அணுகும் மனிதர்களைப் பொறுத்து தமது தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி என்றும் அன்வாரை அழைத்தார்.