‘ரிமோவ் கிளாஸ்’ என்றழைக்கப்படும் புதுமுக வகுப்பின் நிலையை ஆராயும்படி பல தரப்பிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் கல்வி அமைச்சு அதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. பள்ளிகளின் பாடத் திட்டங்கள், போதனைக்கு உகந்த மொழி, கற்பிக்கும் முறை போன்றவை குறித்து பற்பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 55 ஆண்டுகளாக புதுமுக வகுப்பு குறித்து எத்தகை ஆய்வும் மேற்கொள்ளப்படாதிருப்பது உண்மையில் வேதனைக்குறியது என செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
புதுமுக வகுப்பிற்குத் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பல ஆக்ககரமான யோசனைகளையும் கருத்துக்களையும் முன் வைக்கத் தயாராய் இருகின்றனர். ஆனால் கல்வி அமைச்சு அதுகுறித்து கரிசனம் காட்டவில்லை.
யு.பி.எஸ்.ஆர். தேர்வுக்குரிய பஹாசா மலேசியா பாடத்தில் குறைந்தபட்சம் ‘சி க்ரேட்’ கிடைக்கப்பெறாத தேசிய மாதிரி தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதலாம் படிவம் செல்லும் முன், புதுமுக வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். தமிழ், சீனப்பள்ளி மாணவர்களுக்கான யு.பி.எஸ்.ஆர் பஹாசா மலேசியா பரீட்சைத் தாளின் தரம் சற்று குறைவாக இருக்கும். இதனால்தான் தேசியப் பள்ளி மாணவர்களின் ‘இ’ அடைவு நிலைக்கு அது சமமாகாது என்று கூறப்படுகிறது.
உதாரணத்துக்கு, சென்றாண்டு உலு சிலாங்கூரில் உள்ள புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 72 பேர் 6-ஆம் வகுப்புக் கல்வியை முடித்தனர். இவர்களில் 25 பேர் மட்டுமே முதலாம் படிவத்திற்குச் சென்றனர். இதர மாணவர்கள் புதுமுக வகுப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. பஹாசா மலேசியாவில் குறைந்த மதிப்பெண் பெற்றமையால் 65% மாணவர்கள் புதுமுக வகுப்புக்குச் செல்லும் நிலை உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் இது குறித்து கடந்த 57 ஆண்டு அபாயமணி ஒலிக்காது இருப்பது குறித்து ஆச்சரியமாக உள்ளது.
சீனப் பள்ளி மாணவர் ஒருவர் புதுமுக வகுப்பில் பின்தங்கினால் அவர் வாழ்வில் முன்னேறுவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர் பின் அடைவு கண்டால், இனவாரியாக பிரிக்கப்பட்டுள்ள இந்நாட்டில் அவன் வாழ்வு தேடி எங்கே செல்வான்? நம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பஹசா மலேசியா பாடத்தில் சிறந்து விளங்கி, நேரடியாக படிவம் ஒன்றுக்குச் செல்வதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது மிக மிக அவசியம். நமது பிள்ளைகள் ஏன் ஒரு ஆண்டை வீணடிக்க வேண்டும்.
1957-ஆம் ஆண்டிலிருந்து ம.இ.கா.வுக்கு தமிழ்ப் பள்ளிகள் பகடைக்காய்களாக உள்ளன. தங்களின் சொந்த அரசியல் இலாபத்திற்காக அவர்கள் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டனர்.
புதுமுக வகுப்பில் நிலவும் மற்றோரு குறைப்பாடு, அவ்வகுப்பில் போதிக்கும் ஆசிரியர்கள் தாய்மொழி அறிந்திருக்காததுதான். இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்புநிலை பாதிக்கப்படுகிறது. பின்தங்கிய மாணவர்களுக்கு அது பெரும் சோதனையாக இருக்கின்றது. எங்கே சென்று முறையிடுவதென அறியாமல் தவிக்கின்றனர். இந்த விரக்தி நிலையால்தான் பள்ளிக்கு மட்டம் போடும் பழக்கம், கல்வியில் நாட்டம் இல்லாமல் போகுதல், வன்செயல்களில் ஈடுபாடு கொள்ளுதல் போன்ற தீய பழக்கங்கள்களில் அவர்களின் கவனம் திரும்பிவிடுகிறது. பெற்றோரும் என்ன செய்வதன்று அறியாது பேதலிக்கின்றனர். விளைவு??
மாணவர்கள் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கொள்ளைக் கும்பல், போதை பொருள் நடவடிக்கை போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்கின்றனர்!
மாணவர்களைக் கவரும் வகையில், புதுமுக வகுப்புப் பாடங்கள் சீரமைக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் மாணவர்களின் ஆதங்கம் என்னவென்பது அறிந்து கொள்ள முற்பட வேண்டும். புதுமுக வகுப்புகளில் போதிக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் தாய்மொழி அறிந்திருப்பதோடு, திறமை குறைந்த மாணவர்களுக்கு விவேகத்துடன் கற்பிக்கும் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். இது போன்ற விவகாரங்களில் கல்வி அமைச்சு பாரா முகமாய் இருப்பதால்தான், புதுமுக வகுப்பில் பஹாசா மலேசியா பாடத்தின் தரம் உயர்வு காணாமல் போகிறது. இதனால் இளம் பருவத்திலேயே மாணவர்களும் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையும் ஏற்படுகின்றது.
ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் ‘7ஏ சாதனையில்’ மட்டும் மூழ்கிவிடாமல்
பள்ளிகளில் பெரும்பான்மையாக இருக்கும் திறன் குறைந்த மாணவர்களின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வி அமைச்சு புதுமுக வகுப்பை சிறந்த ‘இடைக்கால வகுப்பாக’ தரம் உயர்த்தச் செய்வதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு கோரிக்கை விட வேண்டும். நமது சமுதாயமும் விழிப்புணர்வு பெற்று ஆனவற்றை உடனே செய்ய வேண்டும்.
இப்போது மாற்றம் இல்லையெனில் பின் எப்போது??
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்