கோலாலம்பூரில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பதிவு செய்யும் சாத்தியத்தை போலீஸ் ஆராய்ந்து வருகிறது.
எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் போராளிகளும் அடங்கிய 17 தனிநபர்கள் மீது செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஸாக்காரியா பாஹான் டிசம்பர் 30ம் தேதி செய்து கொண்ட போலீஸ் புகார் மீது விசாரணை நடத்திய பின்னர் அது பற்றி ஆராயப்படுகிறது.
அந்த 17 பேரில் தியான் சுவா, சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின், என் சுரேந்திரன், லத்தீப்பா கோயா, ரோஸான் அசென் மாட் ராஸிப், சுராய்டா கமாருதின் ஆகிய பிகேஆர் அரசியல்வாதிகளும் அடங்குவர்.
இ.நளினி, எட்மண்ட் போன், வோங் சின் ஹுவாட், எஸ் அருட்செல்வன், பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின், ஹாரிஸ் இப்ராஹிம், மரியா சின் அப்துல்லா, எஸ் அம்பிகா ஆகிய போராளிகளும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அந்தப் போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள 17 பெயர்களில் 15 பேரை தெரிந்து கொண்ட பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், சட்ட விரோதப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதில் அந்த 17 பேரும் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்தப் புகார் கூறுவதாகத் தெரிவித்தார்.
இன்று சந்தேகத்துக்குரிய ஒரு நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆவார். 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அஸ்மின் விசாரிக்கப்படுவதாக அவரிடம் கூறப்பட்டது. ஆனால் ஸாக்காரியா சமர்பித்த போலீஸ் புகாரில் அஸ்மின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“விசாரணை ஒர் அச்சுறுத்தல்”
அஸ்மினுடைய வாக்குமூலம் கெப்போங் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. தமக்கு எதிரான போலீஸ் விசாரணை ஒர் அச்சுறுத்தல் என அவர் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“நான் அந்த விசாரணை குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளேன். ஜனவர் 6ம் தேதி அந்தப் பேரணிக்குப் போலீசார் அனுமதி கொடுத்தனர். ஏன் இப்போது விசாரணை நடத்தப்பட வேண்டும்?”
“பக்காத்தான் ராக்யாட் தலைவர்களை பேசாமல் இருக்கச் செய்வதற்கு இது ஒரு வகையான அச்சுறுத்தல் ஆகும்,” என போலீஸ் நிலையத்தில் சந்தித்த போது சொன்னார்.
சந்தேகத்துக்குரியவர்களை தடுத்து வைப்பதற்கு குற்றவியல் சட்டத்திம் 105வது பிரிவு பயன்படுத்தப்படலாம் என்றும் அந்தப் போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளதாக ஒர் வழக்குரைஞருமான சுரேந்திரன் சொன்னார்.
அஸ்மின் கூறியதை ஒப்புக் கொண்ட சுரேந்திரன் போலீசார் எல்லா வகையான அச்சுறுத்தல்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். போலீஸ் புகாரில் பெயர் இல்லாத போதும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அஸ்மின் விசாரிக்கப்பட்டுள்ளது அத்தகைய அச்சுறுத்தல்களில் ஒன்று என்றும் அவர் சொன்னார்.
“அது வினோதமாக இருக்கிறது. ஆனால் போலீஸ் விசாரணையில் அது நடக்கும்,” என அஸ்மின் மேலும் கூறினார்.