பிரதமர், “பாக் லா” கட்டத்துக்குள் நுழைகிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு விகிதம் சரிந்திருப்பதாக கூறும் கருத்துக் கணிப்புக்கள், பிரதமர் மீது வைக்கப்பட்டிருந்த நல்லெண்ண சேமிப்பு கரைந்து விட்டதைக் காட்டுவதாக டிஏபி ஆய்வாளாரான லியூ சின் தொங் கூறுகிறார்.

அவருக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று நஜிப்பின் செல்வாக்கும் சரிகிறது என்றார் அவர்.

பிரதமருடைய செல்வாக்கு ஆறு புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகி இருப்பதாக நேற்று மெர்தேகா மையம் தகவல் வெளியிட்டது. அந்த விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் குறைவானதாகும்.

“நஜிப் பாக் லா கட்டத்துக்குள் நுழைகிறார் என நான் நினைக்கிறேன். பாக் லா கால கட்டத்தைப் போன்று அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன,” என லியூ சொன்னார்.

“டாக்டர் மகாதீர் முகமட்டின் 22 ஆண்டு கால ஏதேச்சதிகார  ஆட்சிக்குப் பின்னர் பொறுப்பேற்ற அப்துல்லாவிடமிருந்து மக்கள் நிறைய எதிர்பார்த்தனர்.”

ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த அப்துல்லாவுக்கு 2004ம் ஆண்டு அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற போது செல்வாக்கு விகிதம் 91 விழுக்காடாக இருந்தது என அதே மெர்தேக்கா மையம் கூறியது.

ஆனால் அப்துல்லா மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டதால் 2008 தேர்தலில் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் இழக்க நேரிட்டது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது செல்வாக்கு 43 விழுக்காடாக சரிவு கண்டது. நஜிப்பின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டதையே அவரது செல்வாக்குச் சரிவு காட்டுவதாக புக்கிட் பெண்டேரா எம்பி-யுமான லியூ சொன்னார்.

“அச்சரிவு அவர் செய்ய நினைத்தது நடக்காமல் போனதால் அவர் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான அறிகுறியாகும்.”

TAGS: