“அது உண்மையில் அரசியல் இல்லை என்றால் அதற்குப் பதில் தயாரிப்பாளர்கள் மலேசிய கொடியைப் போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்.”
பிரதமர்: ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல
டூட்: கோதுமை மாவு, சீனி, சமையல் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைப் பொட்டலங்களில் போட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது அரசியல் இல்லை என எப்படிச் சொல்ல முடியும்?
ஒரே மலேசியா என்றால் நஜிப் ரசாக் என்பதும் இஸ்லாம் ஹடாரி என்றால் அப்துல்லா அகமட் படாவி என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
எந்த ஒரு தேசிய நோக்கத்தை அடைவதற்கு உதவாமல் அந்தச் சின்னம் நஜிப்புக்கு ஆதரவு தேடும் பொது உறவு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.
அரசாங்கம் அந்தப் பொருட்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது எனப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்த அவர் உண்மையில் விரும்பினால் அந்தச் சின்னத்தை கைவிடுங்கள்.
“மலேசிய அரசாங்கத்தினால் உதவித் தொகை கொடுக்கப்பட்டது” என்ற சொற்றொடரை அதற்குப் பதில் பயன்படுத்துங்கள். அதனை பலர் ஒப்புக் கொள்வது திண்ணம்.
பிரெடோ: ஒரே மலேசியா சின்னம் அரசியல்வாதிகளினால் வடிவமைக்கப்பட்டது. ஆகவே அது அரசியல் இல்லை என்றால் வேறு என்ன?
இந்த நாட்டில் அது வேறு என்னவாக இருக்கும்? எல்லாரும் ஒரே மலேசியா சின்னத்துக்கு அடி பணிய வேண்டுமா? ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு வழி ஆகும்.
நிக் வி: நஜிப் பதிலில் எந்த விவேகமும் இல்லை. சிந்தனையும் இல்லை. பெரும்பாலான மலேசியர்களை பொறுத்த வரையில் ஒரே மலேசியா என்பது பெயரளவுக்கு மட்டும்தான் உள்ளது. உணர்விலும் நடைமுறையிலும் அறவே இல்லை.
எனவே அது முழுக்க முழுக்க அம்னோ/பிஎன் அரசியல் பரப்புரை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
உங்கள் அடிச்சுவட்டில்: ஒரே மலேசியா அரசியல் அல்ல என நீங்கள் சொல்வதை யார் நம்பப் போகிறார்கள்? நீங்கள் மலேசியர்களை முட்டாள்கள் என நினைக்கின்றீர்களா?
உண்மையில் நீங்கள் சொல்லும் காரணம் உங்களைப் பற்றி நிறையச் சொல்கிறது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது பற்றி நீங்கள் கவலைப்படுவதே இல்லை. உங்கள் பதவியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் வெட்கப்படுவதே இல்லை. அது உங்களையே திருப்பித் தாக்கப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
ஜெரோனிமோ: அது ஒர் உண்மையை மெய்ப்பிக்கிறது. மக்கள் அந்த வெற்று சுலோகத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் அது வேலை செய்வதற்கு அதனைக் கட்டாயமாகத் திணிக்க அவர்கள் முயலுகின்றனர்.
நஜிப் சொல்வது சரி தான் -“‘ஒரே மலேசியா” அரசியலும் அல்ல. அதே வேளையில் மலேசியாவைப் பற்றியதும் அல்ல.
அது சுய பெருமையை பறைசாற்றிக் கொள்வதாகும். நடுவண நிலையிலிருந்து தாம் போகும் போது மக்கள் தம்மை நினைவில் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல அவர் விரும்புகிறார்.
கலைப்பவன்: அது உண்மையில் அரசியல் இல்லை மலேசியாவைப் பற்றியது என்றால் ஒரே மலேசியா சின்னத்துக்குப் பதில் தயாரிப்பாளர்கள் மலேசிய கொடியைப் போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
ஜாலுர் கெமிலாங்-கை (தேசியக் கொடி) போடுவதின் மூலம் அவர்கள் தங்கள் விசுவாசத்தை இன்னும் சிறந்த முறையில் காட்ட முடியுமே? நஜிப் அவர்களே, உங்களுக்கு இரட்டை நாக்கு இல்லை என்பதை மெய்பிக்கலாமே?
ஹோல்டன்: சின்னத்தைப் போடுவதால் நீங்கள் உங்கள் நாட்டை அதிகம் நேசிக்க முடியுமா?
உங்கள் ஆலோசகர்கள் மலேசியர்களைச் சாதாரணமாக எடை போட்டு விட்டனர். ஒரே மலேசியா நனவாவதற்கு தடையாக உள்ள உண்மையான பிரச்னைகளை முதலில் தீர்க்க முயலுங்கள். மேலோட்டமான நடவடிக்கைகளில் நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
சாம்சாரா: நஜிப் அவர்களே, மக்கள் கல்வி கற்றுள்ளனர், அறிவாற்றலைப் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் விவேகமடைந்து வருகின்றனர். உதவித் தொகை கொடுக்கப் பயன்படுத்தப்படும் பணம் மக்கள் பணம். அரசாங்கம் மக்கள் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டும். அந்த ஒரே மலேசியா, அம்னோ/பிஎன் வெற்று அரசியல் சுலோகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.