செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை சரிவு பிரதமர் நஜிப்பின் போலி அரசியலுக்கு முத்திரை

இந்திய சமூகம் பிரதமர் நஜிப்பின்  வானவேடிக்கை அரசியலில் ஏமாறக்கூடாது என்று பலமுறை எச்சரித்திருந்தோம். இன்று அனைத்து மலேசியர்களிடமும், குறிப்பாக இந்திய சமூகத்தின் துன்பங்கள் மீது, பரிவுமிக்கவர் போன்றப் பாவனை காட்டித் திசைதிருப்புவதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.  ஆனால் நேர்மையான தலைமைத்துவத்தின் உண்மையான அணுகுமுறையின்றி ஒருபோதும் இந்திய சமூகத்தின் இன்னல்கள் தீரப்போவதில்லை என்பதற்கு செர்டாங் தமிழ்ப்பள்ளி  கூரை சரிவு  ஒரு சிறந்த உதாரணமாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறுகிறார்.

“செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை மற்றும் கட்டடம் பாதுகாப்பற்றது. இது உபயோகத்திற்குத் தகுதியற்றது என்று பொதுபணித்துறை கடந்த 2002ஆம் ஆண்டே அறிவித்திருந்தும், கட்டடம்  சரிந்து விழும்வரை அதனை எட்டி பார்க்க எந்த அமைச்சருக்கும், பிரதமருக்கும்  அக்கறையில்லை.

“அந்த  கட்டடத்தின் அவலநிலை குறித்து 2 வாரங்களுக்கு முன் கல்வி இலாக்காவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இதுவும் இந்தியர்களின் பிரச்சனைத்தானே, இதில் மட்டும் ஏன் பாராமுகம்?, என்று அவர் வினவினார்.

செர்டாங் தமிழ்ப்பள்ளி இருக்கக்கூடிய அதே நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் பூச்சோங் தமிழ்ப்பள்ளியின் துணைக்கட்டட மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில அரசு ஓர் இலட்சத்து இருபதாயிரம் ரிங்கிட்டை அளித்ததால்,  2011ஆம் ஆண்டு அக்டோபரில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அங்கு வருகை புரிந்து 4 இலட்சம் ரிங்கிட்டும், அதே ஆண்டு நவம்பரில்  மஇகாவின் தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் வருகை புரிந்து 15 ஆயிரம் ரிங்கிட்டும் தந்துள்ளனர் என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.

அதே தொகுதியிலுள்ள மற்றொரு தமிழ்ப்பள்ளிக்கு கெஅடிலான் கட்சித் தலைவர் ஒருவர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருப்பதால், அப்பள்ளிக்கு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி வருகை புரிந்த பிரதமர் நஜிப் கின்ரார தமிழ்ப்பள்ளியின் துணைக்கட்டட நிர்மாணிப்புக்கு ரிங்கிட் 3 மில்லியன் தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் என்ற வான வேடிக்கையையும் நடத்திவிட்டுச் சென்றார் என்று சேவியர் மேலும் கூறினார்.

“ஆனால்,  அதே தொகுதியில் இயங்கும் செர்டாங் தமிழ்ப்பள்ளி மீது ஏன் பிரதமருக்கு அக்கறையில்லை? செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை மற்றும் கட்டடம் பாதுகாப்பற்றது, இது உபயோகத்திற்குத் தகுதியற்றது என்று பொது பணித்துறை கடந்த 2002 ஆம் ஆண்டே எச்சரித்திருந்தும், கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு முழு அரசாங்கப்பள்ளியின்  அவலநிலையைக் கவனிக்க மனமில்லை. மஇகா அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் பரிவுக்கும், கடமை உணர்வுக்கும் இதனைவிட இன்னும்  சிறந்த சான்றாக  என்ன வேண்டும்?, என்று அவர் கேட்டார். 

“நம்புங்கள்” என்று கோரிக்கை விடும் பிரதமரின் கோரிக்கை நம்பகமானதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய சேவியர், “அரசியல் ரீதியில் தங்களுக்குப் பயனில்லை என்று  அம்னோவும், மஇகாவும் கருதுவதால், செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை சரிந்து விழும் வரை எவருக்கும் அக்கறையில்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

அதேபோல், அரசியல் ரீதியாக இந்திய சமூகத்தின்  தயவு தனக்குத் தேவையில்லை என்ற நிலை வரும்போது  இந்தியர்களை பிரதமர் கைகழுவி விடுவார் என்பதை இந்திய சமூகம்  என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.

TAGS: