அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பல புதுமுகங்களை நிறுத்தும். அவர்களில் பல முஸ்லிம் அல்லாதவர்களும் தொழில் நிபுணர்களும் முன்னாள் அரசாங்க ஊழியர்களும் இருப்பதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார்.
அவர் ‘புத்ராஜெயாவுக்கு பாஸ் செல்லும் வழிமுறை’ என்னும் தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார். ஆனால் அவர் எத்தனை புதுமுகங்கள் நிறுத்தப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.
“அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கும் பக்காத்தானுக்கும் உதவக் கூடியவர்கள் நாங்கள் கருதும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அணுகி வருகிறோம்.”
அவர்கள் இளம் வயதினராகவும் இருக்கலாம். முதியவர்களாகவும் இருக்கலாம். முன்னாள் அரசாங்க ஊழியர்களாகவும் முன்னாள் இராணுவ, போலீஸ் வீரர்களாகவும் இருக்கலாம்,” என அவர் கோலாலம்பூரில் சொன்னார்.
2008ம் ஆண்டு தொடக்கம் பாஸ் உறுப்பினர்கள் மிகவும் திறந்த போக்கைப் பின்பற்றி வருகின்றனர் என்றும் கட்சியின் ஆதரவாளர் மன்றத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும் முகமட் சாபு சொன்னார். அவர்கள் வேட்பாளர்களாகக் கூட நிறுத்தப்படுவதை பாஸ் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எகிப்தில் Ikhwan Muslimin என்ற அமைப்பு கிறிஸ்துவ வேட்பாளர் ஒருவரைக் கூட நிறுத்தியுள்ளது என்றார் அவர்.
பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் இட ஒதுக்கீடு ஏறத்தாழ 80 விழுக்காட்டு தீர்க்கப்பட்டு விட்டதாகவும் வெவ்வேறு மாநிலங்களில் “ஒரிரு இரு இடங்கள் மட்டுமே” இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் முகமட் சாபு தெரிவித்தார்.
“அடுத்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் கூட நாங்கள் அந்த விவகாரத்தை எளிதில் தீர்த்துக் கொண்டு விடுவோம்.”
பக்காத்தானில் வெளியேறிய சுயேச்சை வேட்பாளர்கள் வசம் தற்போது இருக்கும் தொகுதிகள் விவாதிக்கப்படும் இடங்களில் அடங்கும். அவற்றுள் நிபோங் திபால், பாயான் பாரு, பாகான் செராய் ஆகியவையும் அடங்கும்.
கட்சி மாறியவர்கள் தனிநபர்கள் என்றும் கட்சி அல்ல என்ற வாதத்தை தோழமைக் கட்சிகள் முன்வைக்கின்றன. என்றாலும் தொகுதிகள் மாற்றிக் கொள்ளப்படலாம்,” என்றார் அவர்.