இந்தியர்களிடம் நம்பிக்கை வையுங்கள் என்று கை ஏந்தும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்குமுன் அவர்களிடம் அவர்களின் உரிமையை எடுத்து நீட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கண்டனக் கடிதம் ஒன்றில் இண்ட்ராப் குறிப்பிட்டுள்ளது. அக்கடிதம் இன்றுகாலை புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 50 பேர் பிரதமர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று அக்கடிதத்தை ஒப்படைத்தனர்.
“இண்ட்ராபின் 18-அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” என்றும் “1நாடு 2நடைமுறைகள்” என்றும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள் வழிநெடுகிலும் பாடிக்கொண்டே சென்றனர்.
பிரதமர் அலுவலகத்தின் முன்வாசலை அடைந்ததும் “வேண்டும் உரிமை, வேண்டாம் நம்பிக்கை” என்று முழக்கமிட்டனர்.
இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் 18கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைத் தயாரித்த இண்ட்ராப், அதனை 2007-இல் அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியிடம் ஒப்படைத்தது. 2007 நவம்பரில் இண்ட்ராப் பேரணி நடப்பதற்கு முன்பு நிகழ்ந்த கதை இது.
“பிரதமர் அவர்மீது நம்பிக்கை வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்வதன்மூலம் இந்தியர்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆனால், நாங்கள் மீண்டும் ஏமாறத் தயாராக இல்லை. எங்களுக்கு எங்களின் உரிமை தேவை”, என்று இண்ட்ராப் சட்ட ஆலோசகர் எம்.மனோகரன் கூறினார்.
அண்மைய காலமாக, பிரதமர் இந்தியர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தம்மீது அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது வழக்கமாகி விட்டிருக்கிறது. பத்துமலை தைப்பூச விழாவிலும் அவ்வாறே அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய இண்ட்ராப் தலைவர் உதயகுமார், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதுபோனால் மார்ச் 25-இல், பிரதமர் அலுவலகத்துக்குமுன் பேரணி நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.
“ஐந்தாண்டுகளுக்குமுன்பு இதே மகஜரைக் கொடுத்தோம். ஆனாலும் 55 ஆண்டுகளாக இப்பிரச்னைகள் ஏழை இந்தியர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன….நம்பிக்கை பற்றிப் பேசுவதற்குமுன் தயவுசெய்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
எல்லாவகை முயற்சிகளும் பயன் தரவில்லை என்றால் இந்தியர்கள் மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை உருவாகலாம் என்றாரவர்.
இதனிடையே, மனோகரன், இந்தியர்கள் இண்ட்ராபின் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“எங்களின் 18-அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 100,000 கையெழுத்துக்களைத் திரட்ட நோக்கம் கொண்டிருக்கிறோம்.
“அரசாங்கம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்லிச் சொல்லி இந்தியர்களை உறங்கவைக்கப் பார்க்கிறது. ஆனால், நாங்கள் அவர்களை விழிப்புநிலையில் வைத்திருக்கவே விரும்புகிறோம்”, என்றார்.