மந்திரி புசார்: ஜயிஸ் அறிக்கை தயாரிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்கிறது

ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற பல இன விருந்தில் தான் நடத்திய சோதனை பற்றி அறிக்கை வழங்குவதற்கு ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளது.

அந்தத் தகவலை மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இன்று வெளியிட்டார். கடந்த வியாழக்கிழமை ஜயிஸ், விருந்து ஏற்பாட்டாளரான ஹரப்பான் கம்யூனிட்டி ஆகியவற்றின் பேராளர்களுடன் தாம் நடந்திய சந்திப்பின் போது ஜயிஸ் பேராளர் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக காலித் தெரிவித்தார்.

“நாங்கள் அதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க முடிவு செய்தோம்.”

அவர் ஷா அலாமில் மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை நடத்திய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த உபசரிப்பை பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகமும் பிஎன்எஸ்பி என்ற பெர்மொடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் ஆகியவை ஏற்பாடு செய்தன.
 
பெர்னாமா

TAGS: