பொதுவிவாதங்கள்மீது மஇகாவின் நிலைப்பாடு காலத்துக்கு ஏற்றதல்ல

டிஏபி உதவித் தலைவரும் ஈப்போ பாராட் எம்பியுமான எம்.குலசேகரன், மாற்றரசுக்கட்சிகளுடன் பொதுவிவகாரங்கள் குறித்து வாதம் செய்ய மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவிலும் இன அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைத் தலைவர்களும் கட்சிகளும் பொதுமேடைகளில் விவாதிப்பது பற்றிக் கருத்துரைத்தபோது டாக்டர் சுப்பிரமணியம் அவ்வாறு கூறியிருந்தார்.

பொது மேடைகளில் பொது விவகாரங்கள் குறித்து வாதம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமைகூட மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கும் டிஏபி தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங்கும் வாதமிட்டனர்.தொலைக்காட்சியிலும் அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டுப் பலராலும் கண்டு ரசிக்கப்பட்டது.

“விவாதங்கள் தொடர்பில் மஇகா துணைத்தலைவரின் நிலைப்பாடு எனக்கு ஏமாற்றமளிக்கிறது”, என்று குலசேகரன் கூறினார்.அவர், இன்றுகாலை ஈப்போவில், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தம் தொகுதியைச் சுற்றிப் பார்த்தார்.

டாக்டர் சுப்ரமணியம் இந்தக் காலத்துக்கு உரியவர் அல்லர் என்று குறிப்பிட்ட குலசேகரன் இக்கால மக்கள் கூடுதல் படிப்பறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் என்றும் பொது விவாதங்களின்வழி தங்கள் தலைவர்களின் தகுதிப்பாட்டை தெரிந்துகொள்ள அவர்கள்விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

மனிதவள அமைச்சரான டாக்டர் சுப்ரமணியம்,“எங்களுக்கு (விவாதங்கள்) தேவையில்லை என்று எண்ணுகிறேன். விரும்புகிறவர்கள் அதில் ஈடுபடலாம்…..நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்”, என்று கூறியதாக பெர்னாமா அறிவித்திருந்தது.

பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பதால்  அரசியல்வாதிகள் தேசிய ரீதியாகவும் இனரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கும் விவகாரங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளைத் தற்காத்துப் பேசும் அளவுக்கு திறன் பெற்றிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள்” ,என்று குலா கூறினார்.

பொது விவாதங்களில் கலந்துகொள்ள தலைவர்கள் முன்வருவது-அது ஒன்றே அவர்களின் தகுதிக்குச் சான்று அல்ல என்றாலும்கூட- அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை அளவிட உதவுகிறது என்றவர் விளக்கினார்.

“தொலைக்காட்சி ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் வாதமிடும் ஆற்றலைப் பெற்றிருப்பதும் முக்கிய தேவையாகும். அதற்கு உடன்பட ஒரு தலைவர் காட்டும் தயக்கம் அவரைப் பற்றி நல்லதோர் எண்ணத்தை உருவாக்காது”, என்று குலா குறிப்பிட்டார்.

TAGS: