ஓராண்டுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் தானா ஆயர் (கித்தா), பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
அக்கட்சியின் பதிவை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் கேட்டு சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யிடமிருந்து கடிதம் வந்திருப்பதாக கித்தா செயலாளர் மஸ்ரும் தயாட் கூறினார்.
“துணைப் பதிவதிகாரியின் கையொப்பத்தைக் கொண்ட அக்கடிதத்தில் கட்சியின் நிர்வாகம் பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார்கள்…..ஐந்து விசயங்களுக்கு மார்ச் 9-க்குள் பதில் அளித்தாக வேண்டும்.நாங்கள் பதில்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
எவை பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார்கள் என்பதை அவர் விவரிக்கவில்லை. ஆனால், கட்சி வட்டாரங்கள், கட்சியின் விதியைமீறி பலர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி ஆர்ஓஎஸ் விளக்கம் கேட்டிருப்பதாகக் கூறின.கட்சி விதிகளின்படி மத்திய செயல்குழு (சிஇசி)தான் குறிப்பிட்ட அப்பதவிகளுக்கு அவர்களை நியமித்திருக்க வேண்டும்.
ஜூன் 29-இல் நடந்த சிஇசி கூட்டத்தின் குறிப்புகள் அனுப்பி வைக்கப்படாதது பற்றியும் வினவப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கட்சிக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டதை அறிந்தவுடனேயே ஆர்ஓஎஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்ததாக மஸ்ரும் தெரிவித்தார்.
“நாங்கள் விளக்கம் கூறி விட்டோம்.பெரும்பாலும் கட்சி நிர்வாகம் பற்றியே கேட்டார்கள். அது பற்றிப் புகார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். ஆனால், புகார் செய்தவர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
“அப்படி எல்லாம் விளக்கம் கூறிவிட்டு வந்த பின்னர்,கடந்த வாரம் கட்சியை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்று காரணம் கேட்டுக் ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். எப்படியும் மார்ச் 9-க்குள் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்”, என்றாரவர்.
இதனிடையே, கட்சியைக் கலைக்க வேண்டும் என்று கித்தா தலைவர் சைட் இப்ராகிம் முன்மொழிந்திருந்ததை சிஇசி தள்ளுபடி செய்துவிட்டதாகவும் மஸ்ரும் தெரிவித்தார்.
அத்துடன் சைட்,கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்றும் சிஇசி முடிவு செய்திருக்கிறது.
“அதனால், பிப்ரவரி 25-இல் நடக்கவிருந்த ஆண்டுப் பேராளர் கூட்டம் ஏப்ரலுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கட்சி ரத்துச் செய்யப்படாதிருக்க வேண்டும்”, என்றாரவர்.