குவான் எங்: பெர்காசாவை ஆதரிக்கும் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார்

இடச்சாரி மலாய் அமைப்பான பெர்காசாவை ஆதரிப்பதால் பிரதமர் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார் என்று டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் கூறினார்.

கடந்த சனிக்கிழமை அந்த அமைப்பின் நிதி திரட்டல் விருந்து நிகழ்வில் பிரதமரின் துணைவி ரோஸ்மா பங்கேற்றிருந்தது குறித்து கருத்துரைத்த லிம், இந்த ஆதரவு நஜிப்பின் மிதவாத கோரிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றார்.

“அவரது வெற்று சுலோகமான 1மலேசியா மூலம் மிதவாதத்தையும் தேசிய ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் அதே வேளையில் பெர்காசாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகள் அளிப்பதின் மூலம் நஜிப் நெருப்புடன் விளையாடுகின்றார்.

“பெர்காசாவுக்கான அவர்களின் நேர்முக மற்றும் மறைமுக ஆதரவின் விளைவாக, நஜிப், ரோஸ்மா மற்றும் பாரிசான் நேசனல் அரசாங்கம் பெர்காசாவின் தீவிரவாத, தேசநிந்தனையான நடவடிக்கைகளுக்கும் அறிக்கைகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்”, என்று லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

அந்த விருந்து நிகழ்வில் முக்கிய விருந்தாளியாக கலந்துகொண்ட ரோஸ்மாவின் பங்கு நஜிப்பும் அவரது அரசாங்கமும் “அந்த தீவிரவாத மற்றும் இனவாத இயக்கத்தைப் பகிரங்கமாக ஆதரிப்பவர்கள்” என்பதை “தெள்ளத்தெளிவாக” காட்டுகிறது என்றார் அவர்.

தீவிரவாதமும் தேசநிந்தனையும்

“அரசாங்கம் அதற்கு அளிக்கும் ஆதரவை மறைக்கும் நோக்கத்தோடு (பெர்காசா) ஓர் அரசு சார்பற்ற அமைப்பு என்ற பொய்யான தோற்றத்துடன் உலவி வருகிறது”, என்று கூறிய பினாங்கு முதலமைச்சரான லிம், பெர்காசா ஒரு தீவிரவாத மற்றும் தேசநிந்தனை அமைப்பு என்று குற்றம் சாட்டினார்.

பெர்காசாவின் தேசநிந்தனை நடவடிக்கைகளில் ஒன்று பெர்சே 2.0 தலைவர் அம்பிகா சீனிவாசனின் படத்திற்கு தீயிட்டு கொளுத்தியதும் அவரை ஓர் “ஆபத்தான இந்து பெண்” என்று கூறியதாகும் என்றார் லிம்.

கடந்த சனிக்கிழமை, இப்ராகிம் அலி, ரோஸ்மாவை “தேசிய வீரப் பெண்மணி” என்று பாராட்டி  அவ்விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 700 பேருடன் சேர்ந்து பிரதமரின் துணைவியாரிடம்: “நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்று கூறினார்.

TAGS: