பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்…!

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (வயது 85) சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி, விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லெட்சுமி, ஏராளமான தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பின்போது கிழே வழுக்கி விழுந்ததில் அவரது தண்டுவடத்தில் பலத்த அடிப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அவர் நடித்து வரும் ஒரு தொடர் நாடக நடிகர், நடிகையர் சந்தித்த போது, தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில் நலமுடன் திரும்பி வருவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரது உடல் திடீரென மோசடைந்து மருத்துவமனையிலேயே இரவு காலமானார்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சின்ன வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்தவர். தன்னுடைய 6 வயதில் மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.என்.லெட்சுமி படிப்படியாக வெள்ளித்திரைக்கு வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அந்தக்கால பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். சினிமா துறைக்கு வந்ததில் இருந்து கடைசி வரைக்கும் தனது சொந்த குரலில் தான் ‘டப்பிங்’ பேசி வந்தார்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தனக்கு கார் ஓட்டுநர் கூட வைத்துக்கொள்ளாமல், தானே காரை ஓட்டிச் செல்வார். நடிப்பு, நடிப்பு என்று கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத எஸ்.என்.லெட்சுமி, தனது அண்ணன் பேத்திகளுடன் சென்னை, சாலி கிராமத்தில் வசித்து வந்தார்.

மறைந்த எஸ்.என்.லெட்சுமியின் உடல் அவரது சாலிகிராம வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவை கேட்டு ஏராளமான திரை நட்சத்திரங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.என்.லெட்சுமியின் இறுதி சடங்கு, விருதுநகரில் உள்ள அவரது சொந்த ஊரான சென்னல்குடியில் இன்று (21.02.12) நடைபெற இருக்கிறது.