FGVH எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தை புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது மீதான விவாதத்தை நிறுத்துவதற்கு வகை செய்யும் நீதிமன்றத் தடை உத்தரவு KPF என்ற Koperasi Permodalan Felda-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெல்டா ஹோல்டிங்ஸிலும் அதன் துணை நிறுவனங்களிலும் உள்ள KPF பங்குகளை கைவிடுவது பற்றி நாளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனது அவசரப் பொதுக் கூட்டத்தில் அந்தக் கூட்டுறவுக் கழகம் விவாதிப்பதை அந்தத் தடை உத்தரவு தடுப்பதாக குடியேற்றக்காரர் ஆதரவு பெற்ற அனாக் என்ற அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறினார்.
கோலாலம்பூரில் ஜாலான் செமாராக்கில் அமைந்துள்ள KPF தலைமையகத்தில் அதன் நடவடிக்கை நிர்வாக அதிகாரி அகமட் தார்மிஸி நேற்று அந்த தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டதாக அவர் சொன்னார்.
பங்குச் சந்தையில் Felda Global Ventures Holdings நிறுவனப் பங்குகளைப் பட்டியலிடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்தத் தடை உத்தரவு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
“பெரும் தொகை” கிடைக்கும் என வாக்குறுதியளிக்கும் கடிதங்கள்”
FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் பெரும் தொகை கிடைக்கும் என பெல்டா ஹோல்டிங்ஸ் இயக்குநர்கள் வாக்குறுதி அளிக்கும் கடிதங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக பல குடியேற்றக்காரர்கள் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் மஸ்லான் கூறியுள்ளார்.
“குடியேற்றக்காரர்கள் தங்களது அடையாளக் கார்டு, நில உரிமைப் பத்திரம் ஆகியவற்றின் பிரதிகளை அனுப்ப வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவர்களுக்கு தலா 20,000 ரிங்கிட் கிடைக்கும் என்றும் அதில் உறுதி கூறப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“குடியேற்றக்காரர்களுடைய பதில்கள் பொது வாக்கெடுப்பாகக் கருதப்பட்டு Felda Global Ventures Holdings நிறுவனத்தை பங்குப் பட்டியலில் சேர்ப்பதற்கு குடியேற்றக்காரர்கள் ஆதரவு அளிப்பதாகக் காட்டப்படும் என நான் அஞ்சுகிறேன்,” என்றும் மஸ்லான் சொன்னார்.
அந்தப் புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அனாக் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நாளை அந்தக் கடிதம் மீது புகார் ஒன்றை சமர்பிக்கும் என அவர் தெரிவித்தார்.
அனாக் பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்பாகும்.