ஒசாமாவை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம்?

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் அளித்து கௌரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், அண்மையில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை கோரி காங்கிரசில் மசோதா தாக்கல் செய்து பரபரப்பைக் கிளப்பியவர்.

அதோடு, அமெரிக்காவின் எதிரியான பாகிஸ்தானுக்கு இரு முகங்கள் உண்டு என, கடும் விமர்சனம் செய்து பாகிஸ்தானின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டவர். இந்நிலையில், இவர் நேற்று அளித்த பேட்டியில்,”பின்லாடன் எங்கிருக்கிறார் என, அமெரிக்காவிற்கு தெரிவித்த மருத்துவர் அப்ரிடிக்கு காங்கிரசின் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டு, அவர் அமெரிக்க குடிமகனாக ஆக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

பாக்கிஸ்தான் புலனாய்வுப் பிரிவான ISI-யால் மருத்துவர் அப்ரிடி கைது செய்யபட்ட பின், தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.