பிகேஆர் தனது வார இறுதி விவாதங்களை குவாந்தானுக்கு மாற்றுகிறது

பிகேஆர் இந்த வார இறுதியில் பேராக், லுமுட்டில் தான் நடத்தவிருந்த விவாதங்களை பாகாங், குவாந்தானுக்கு மாற்றியுள்ளது.

அந்த விவாதங்களில் பங்கு கொள்ளும் 130 பேராளர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  Himpunan Hijau 2.0 பேரணியிலும் கலந்து கொள்வதற்கு உதவியாக அந்த இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த விவரங்களை அந்தக் கட்சியின் தலைமைச் செயலாலர் சைபுடின் நசுத்தியோன் இன்று வெளியிட்டார்.

“பேராளர்கள்  Himpunan Hijau பேரணியில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்வுகளையும் நாங்கள் ரத்துச் செய்துள்ளோம்,” என்று அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

பிகேஆர் வியூகங்களை வகுப்பதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களும் தெரிவு செய்யப்பட்ட தொகுதித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்

இதனிடையே அந்தப் பேரணிக்கு பாகாங் மாநிலத்தைச் சேர்ந்த 10,000 உறுப்பினர்களை வழங்குவதாக அந்த மாநில பாஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

அந்தப் பேரணியில் கெமாமான், டுங்குன் ஆகியவற்றைச் சேர்ந்த தனது உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்வர் என திரங்கானு பாஸ் அறிவித்துள்ளது.

Lynas Advanced Materials Plant (Lamp) என்ற அரிய மண் தொழில் கூடம் அமைக்கப்படுவதற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளில் மிகப் பெரியதாக Himpunan Hijau 2.0 பேரணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஞாயிற்றுக் கிழமை காலை மணி 9.30க்கு குவாந்தான் நகராட்சி மன்றத் திடலில் தொடங்கும்.

TAGS: