DAP: “அரசாங்கம் புதிய கணக்கு முறை மூலம் பட்ஜட்டை சிதைத்துள்ளது”

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்னும் மாயையான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ‘புதிய கணக்கு முறை’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக டிஏபி குற்றம் சாட்டியுள்ளது.

பெரும் செலவுகளைக் கொண்ட பல திட்டங்கள் அரசாங்கத்துக்கு முழுமையாக சொந்தமான அல்லது அதற்கு பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு “வெளிமயமாக்கப்பட்டுள்ளன” என்று டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறினார். அவை 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிக்கப்படவும் இல்லை.

56 பில்லியன் ரிங்கிட் பெறும் எம்ஆர்டி திட்டம், 6.5 பில்லியன் ரிங்ஈட் பெறும் எல்ஆர்டி விரிவுத் திட்டம், 74 போலீஸ் நிலையங்களைக் கட்டுவதற்கான 10 பில்லியன் ரிங்கிட் திட்டம் ஆகியவை அந்த பெரும் திட்டங்களில் அடங்கும்.

“வரவு செலவுத் திட்டத்துக்கு அப்பாற்பட்ட செலவுகளும் இன்னும் கணக்கில் வராத செலவுகளையும் கூட்டரசு வரவு செலவுத் திட்டத்தில் எடுத்துக் கொண்டால் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மிக எளிதாக 7 விழுக்காட்டைத் தாண்டி விடும்.”

“நமது கூட்டர்சு வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அந்த “புதிய கணக்கு முறை தில்லுமுல்லு”, நிதிகள் திறமையாகவும் விவேகமாகவும் நிர்வகிக்கப்படுகின்றன என்ற தவறான தோற்றத்தைத் தருவதற்காக செய்யப்பட்டுள்ள சட்டப்பூர்வமான கணக்கு முறை மோசடி,” என புவா நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

“மறைமுகமான நமது கடன்கள் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்தா விட்டால் இப்போதோ பின்னரோ நமது நிதி முறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அது இன்று கிரீஸ் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துயரங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்காது.”

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை 4.7 விழுக்காடாக குறைந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அந்தப் பற்றாக்குறை 2011ம் ஆண்டு 5.4 விழுக்காடாகவும் 2010ல் 5,6 விழுக்காடாகவும் 2009ல் 7.4 விழுக்காடாகவும் இருந்தது.

TAGS: