இணக்கப் போக்கை வலுப்படுத்துமாறு பக்காத்தானுக்கு அறிவுரை

பினாங்கில் வழக்கமாக பிகேஆர் போட்டியிடும் பல மலாய்ப் பெரும்பான்மைத் தொகுதிகள் மீது டிஏபி குறி வைத்துள்ளதாகக் கூறப்படுவதை அந்தக் கட்சி மறுத்துள்ளதை பினாங்கு பிகேஆர் வரவேற்றுள்ளது.

அந்தச் சர்ச்சை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப் போக்கு குறைவாக இருப்பதை சரி செய்து ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை மாநில பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி காசிம் கேட்டுக் கொண்டார்.

2013ம் ஆண்டு வரையில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் வரும் நவம்பர் மாதத்தில் முன் கூட்டியே நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் பரவியுள்ளன.

அதனால் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அடுத்த தேர்தல் நாட்டின் வரலாற்றில் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் அடிக்கடி விவாதங்கள் நிகழ வேண்டும். இணக்கப் போக்கைக் காண வேண்டும். இப்போது அந்தக் கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு அரிதாக நிகழ்கின்றது”, என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“பக்காத்தான் அரசியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.”

வரும் பொதுத் தேர்தலில் பல மலாய் பெரும்பான்மை தொகுதிகளை டிஏபி போட்டியிடுவதற்கு உதவியாக விட்டுக் கொடுக்க வேண்டும் என மாநில டிஏபி உறுப்பினர் ஒருவர் விடுத்துள்ள வேண்டுகோளை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளது பற்றி ஜொஹாரி கருத்துரைத்தார்.

TAGS: