கிட் சியாங்: மகாதீர் காலத்திய இழப்புக்களை ஆய்வு செய்ய வேண்டிய தருணம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தின் கீழ் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.

நடப்பு நிர்வாகம் கடந்த கால ஊழல்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதால் அத்தகைய ஆய்வு அவசியம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ள குறும்புத்தனமான கருத்துக்களைக் கண்டு மலேசியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆத்திரமடைந்துள்ளனர். பொது நிதிகளுக்கு இழப்பை ஏற்படுத்திய எம்ஏஎஸ் மீட்பு நடவடிக்கையைக் காட்டிலும் மோசமான சம்பவங்கள் தாம் விலகிய பின்னர் நிகழ்ந்துள்ளதாக் கூறி அதனை நியாயப்படுத்த அவர் முயன்றுள்ளார்,” என அந்த ஈப்போ தீமோர் எம்பி சொன்னார்.

1.8 பில்லியன் ரிங்கிட் செலவில் எம்ஏஎஸ் மீட்கப்பட்டது குறித்து விளக்கமளிக்கும் போது மகாதீர் முன்வைத்துள்ள வாதம் ‘விபரீதமானது’ என லிம் வருணித்தார்.

எம்ஏஎஸ் மீட்கப்பட்டது பற்றிக் கவனம் செலுத்தும் ஊடகங்கள் மற்றவர்கள் எடுத்துக்காட்டுக்கு தம்மை அடுத்து பதவிக்கு வந்த அப்துல்லா அகமட் படாவியும் பெரும் தொகையிலான பொது நிதிகளை இழந்துள்ளதாக அந்த முன்னாள் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

“தமக்குப் பிந்திய நிர்வாகத்தில் மோசமான நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருக்கும் வரையில் தமது கண்காணிப்பில் பொது நிதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தாம் வருத்தமடைய வேண்டிய அவசியமில்லை என்பது மகாதீருடைய நியாயமற்ற வாதம் ஆகும்.”

முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கும் Pengurusan Danaharta Nasional Bhd-க்கும் இடையில் செய்துள்ள கொள்ளப்பட்டுள்ள தீர்வும் மகாதீர் உருவாக்கிய எடுத்துக்காட்டின் தொடர்ச்சி என்றும் லிம் குறிப்பிட்டார். அத்தகைய ஊழல்களை ஆய்வு செய்வதற்கான தருணம் வந்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

“மகாதீர் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி ஊழல்களில் இழக்கப்பட்ட 100 பில்லியன் ரிங்கிட் பற்றி முழு ஆய்வு செய்வதற்கான தருணம் வந்து விட்டது. அத்துடன் நஜிப் அரசாங்கமும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை.”