எம்பி புவா என்எப்சி கடன் ஒப்பந்த விவரங்களை வெளியிடுகிறார்

அரசாங்கமும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனமும் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தில் உள்ள விவரங்களை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா இன்று வெளியிட்டுள்ளார்.

பெரிதும் தேடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு தலைச் சார்பானது, ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்கியது ஒப்பந்தத்தை மீறியது என்ற எண்ணத்தை அதன் விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆண்டுக்கு இரண்டு விழுக்காடு வட்டியுடன் அரசாங்கம் வழங்கிய அந்த எளிய கடன் தேசிய விலங்குக் கூட மய்யத் திட்டத்துக்கு மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

“நோக்கம்” என்னும் தலைப்பில் அந்த ஆவணத்தின் மூன்றாவது பிரிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “கடன் வாங்குகின்றவர், அந்தக் கடன் வசதியை ஒப்பந்தத்தின் முதலாவது  பட்டியலில் விளக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு நிதி அளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்” எனக் கூறுகின்றது.

ஆகவே சொத்து  முதலீடுகளுக்கு அந்தக் கடனைப் பயன்படுத்தலாம் என என்எப்சி இயக்குநர்கள் ஏற்கனவே விடுத்துள்ள அறிக்கைகள் “முழுக்க முழுக்க அபத்தமானவை” என புவா சொன்னார்.

“அந்த மய்யத்தை அமைப்பதற்கும் அதற்குச் செலவு செய்வதற்கு மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை,” என்றார் அவர்.

கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்தில் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் புவா பேசினார்.அந்த ஒப்பந்தத்தின் பிரதிகளையும் அவர் நிருபர்களுக்கு விநியோகம் செய்தார். “தாம் இது வரை கண்டிராத மிக மோசமான கடன் ஒப்பந்தம் அது,” என்றும் புவா அதனை வருணித்தார்.

அந்த ஆவணம் உண்மையானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரம் ஒன்று அதனை வழங்கியதாகவும் அவர் கூறிக் கொண்டார்.