நேற்று பினாங்கு லினாஸ்-எதிர்ப்புப் பேரணியில் மூண்ட சர்ச்சையின்போது தாக்குண்ட குவோங் வா இட் பாவ் செய்தியாளர் ஆடம் சியு-வுக்கு வலது கையில் காயமேற்பட்டு எட்டுத் தையல்கள் போட வேண்டியதாயிற்று.
குவாந்தானில் அமையவுள்ள லினாஸ் ஆலையினால் கதிரியக்க அபாயம் ஏற்படலாம் என்பதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 நாடு முழுக்க ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணிகளில் ஒன்று பினாங்கிலும் நடைபெற்றது.
மற்ற இடங்களில் எல்லாம் சுமூக நடக்க, பினாங்கு பேரணியில் மட்டும் லினாஸ்-ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர்.சுலோகங்களை முழக்கியும் கொச்சைமொழி பேசியும் தள்ளுமுல்லுவில் ஈடுபட்டும் அவர்கள் ஹிம்புனான் ஆதரவாளர்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள்.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இன்னொரு குவோங் வா இட் வா செய்தியாளர் லீ ஹொங் சுன்னும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டார்.அதன் விளைவாக அவரது தலையில் சிறு காயம் ஏற்பட்டது.
ஆனால், சியுவுக்குத்தான் காயம் அதிகம்.அதன் விளைவாக அவருக்கு பினாங்கு பொது மருத்துவ மனையில் இரவு எட்டு மணிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்றிரவு அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “நன்றாக இருப்ப”தாகவும் தலை மட்டும் வலிப்பதாகவும் சியு குறிப்பிட்டார்.
கண்களில் இரத்தம் கட்டிக்கொண்டிருப்பதால் நாளை மறுபடியும் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றாரவர்.
‘முதல்வரைக் காக்க முயன்று காயமடைந்தேன்’
500-பேர் கலந்துகொண்ட பேரணியில், தாம் காயமடைந்த நேர்ந்த விதத்தை சியு விவரித்தார்.
“முதலமைச்சர்(சிஎம்) லிம் குவான் எங் உரையாற்றி முடித்து கூட்டத்தினருடன் சேர்ந்துகொள்ள மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
“ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருக்குத் தொல்லை கொடுக்க முனைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்தார்கள்.
“ஆனால், குழப்பம் விளைவிப்பதில் நாட்டம் கொண்டிருந்த அந்தக் கும்பல் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு சிஎம்-மை நெருங்கியது.அவர்கள் சிஎம்-மை நெருங்காதபடி நான் தடுக்க முனைந்தேன்.
பேரணி தொடங்குவதற்குமுன்பே, அக்கும்பல் லினாஸ்-எதிப்பாளர்களை நோக்கி கிண்டலடித்தது.அது பினாங்கு பிரச்னை அல்ல என்பதால் “குவாந்தானுக்குப் போங்க’ய்யா”, என்று கூவினார்கள்.
‘சீனா பாபி, சீனா போடோ’
பின்னர் அக்கும்பல் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தம்மைத் திட்டத் தொடங்கினார்கள் என்று சியு கூறினார். “சீனா பாபி(சீனப் பன்றி), “சீனா போடோ(சீன மடையன்)” என்றவர்கள் திட்டினார்கள்.
இனத்தை இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாமென்று தாம் கூறியதும் அக்கும்பல் மேலும் ஆத்திரமடைந்தது.
“என் கையைப் பிடித்து இழுத்தார்கள். ஒருவர் தலைகவசத்தால் என்னை அடித்தார்.மேலும் ஐவர் தலையில் தாக்கினார்கள்.
“இத்தனையும், சிஎம் தாக்கப்படுவதைத் தடுக்க முனைந்தபோது நடந்தது”, என்றவர் தெரிவித்தார்.
லிம்மைத் தொடர்புகொண்டுபேசியபோது, சியுவின் செய்கை மனத்தைத் தொட்டுவிட்டதாகக் கூறினார்.அதே வேளை அச்செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைத்து அவர் மனவேதனையும் அடைந்தார்.
“சியுவை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி என் பத்திரிகைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்”, என்று லிம் தெரிவித்தார்.