தமிழினத்தின் துரோகியாக நஜிப் ஆகக்கூடாது!

“மலேசியாவில் சுமார் 17 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதை நஜிப் மறக்கக்கூடாது” என்ற டாக்டர் என். ஐயங்கரன், ஐக்கிய நாட்டுச் சபையில் கொண்டு வர உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக அமையும், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும் என்றார், தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் EWRF எனப்படும் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான அவர்.

[காணொளியை பார்வையிட அழுத்தவும்]

இன்று (28.02.2012) காலை தமிழ் அறவாரியத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவரோடு சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா, தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, செனட்டர் இராமகிருஷ்னன், சுவாராம் மலேசிய மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், டாக்டர் குணலட்சுமி மற்றும் ரவி ஆகியோர் கலந்துகொண்டு, அடுத்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் இலங்கை தமிழர் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

“ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளர் பான் கீ முன் நியமித்த, முன்னால் இந்தோனேசியாவின் சட்டத்துறைத் தலைவர் மர்சுக்கி டர்ஸ்மான், தென்னாப்பிரிக்காவின் பிரசித்தி பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி யாஸ்மின் சுக்கா மற்றும் அமெரிக்காவின் அனைதுலகச் சட்ட ஆலோசகர் புரபசர் ஸ்டிவன் ரட்னர் ஆகிய மூவரின் அறிக்கை (Panel of Experts’ Report) இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறது” என்ற சிவராசா, மலேசியா ஒரு பொறுப்பான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

“நாம் பாலஸ்த்தீனர்களின் உரிமைக்கும், பர்மியர்கள் உரிமைக்கும் போராடுகிறோம், இதில் தமிழர் உரிமை மட்டும் சோரம் போக வேண்டுமா? இது மலேசியத் தமிழர்களை அவமதிப்பதாக உருவாகும், மனித உரிமை அடிப்படையில் இலங்கையின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினரான சிவராசா வலிறுத்தினார்.

இக்கூட்டத்தில் பேசிய செனட்டர் இராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு தாம் நேரிடையாக இலங்கை சென்று நிலைமையை பார்த்ததாகவும், “சுமார் ஓர் இலட்சம் விதவைகள், ஐம்பது ஆயிரம் அனாதை சிறார்களை உருவாக்கியுள்ள இந்த இலங்கையின் அராஜகமான இராணுவ தாக்குதலை ஆதாரிப்பது படுமோசமான செயல்” என்றார்.

“மலேசிய கண்டிப்பாக இலங்கைக்கு ஆதரவு நல்க கூடாது, அப்படி செய்தால் அது நம்மை அவமானப்படுத்துவதாக அமையும்” என்றார் அவர். இதே கருத்தை வலியுறுத்திய தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி, “அனத்துலக அளவில் தமிழர்களுக்கு நீதி வேண்டும், அதை தடுக்க மலேசியாவுக்கு உரிமை கிடையாது. மாறாக மலேசியா சோரம் போனால், அது அதர்மம். அதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருந்தால் அநீதி வெல்ல நாமும் உடந்தையானதாகி விடும். நமது இந்த உணர்வை புரிந்து மலேசியா நடப்பது நல்லது” என்றார்.

மலேசியா இலங்கைக்கு ஆதரவளித்தால் அது மனித உரிமையை அவமதிக்க துணைபோவதோடு அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கும் உடந்தையாவதாகும் என எச்சரித்த சுவாரம் மலேசிய மனித உரிமைக் கழகத் தலைவர் கா.ஆறுமுகம். அதற்கு பொறுப்பு ஏற்கும் நமது பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களை மலேசியத் தமிழர்கள் தமிழ் இனத்தின் துரோகியாவே பார்க்க நேரிடும் என்ற வழக்கறிஞருமான ஆறுமுகம், “நமது சத்து மலேசியா பிரதமர் நேரிடையாக இந்த விவகாரத்தை கையாள வேண்டும்” என்றார்.

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்றத்தில் உள்ள 47 நாடுகளில் மலேசியா பிரபலமானதாகும். அம்மன்ற கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் கூடியது. இலங்கை சார்பான தீர்மானம், அடுத்த வாரம் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.