வில்கிலீக்ஸ்: “என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம்”

அன்வார் இப்ராஹிம் குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலாவது அம்னோ ஆட்சி தொடருவதற்கு மருட்டலாக இருப்பார் என்னும் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படலாம்.

இவ்வாறு வில்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க அரசதந்திரக் கேபிள் தகவல் ஒன்று கூறுகிறது.

பிரதமர் நஜிப் ரசாக்கும் அம்னோ ஆளும் வர்க்கமும் அன்வார் மீது வழக்குத் தொடருவதால் விளையக் கூடிய அரசியல் ரீதியான செலவுகள் ‘ஏற்றுக் கொள்ளத்தக்கவை’ எனக் கருதி அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு உள்ளும் புறமும் தீவிரமாகத் தொடருவதற்கு முடிவு செய்யலாம் என்றும் அந்தத் தகவல் குறிப்பிட்டது.

அன்வாரைச் சிறையில் அடைத்து அவரை நிரந்தரமாக அரசியலிலிருந்து நீக்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமான இலக்கு என கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சார்ந்த அரசியல் அதிகாரியான மார் டி கிளார்க் என்பவர் ரகசியம் என வகைப்படுத்தியுள்ள அந்தக் குறிப்பு தெரிவித்தது.

“அது முழுக்க முழுக்க சட்ட அமலாக்க விவகாரம் என்றாலும் தேவைப்படும் போது அரசாங்கம் அரசியல் நெருக்குதலைக் கொடுக்கிறது. அதனால் ஏற்படும் அபாயங்களை ஏற்றுக் கொள்கிறது. நீதிமன்றத்தில் பல மாதங்களுக்கு நீடிக்கும் உயர் நிலை நாடகத்துக்குப் பின்னர் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும்,” என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கத் தூதர் ஜேம்ஸ் ஆ கீய்த் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள அந்தத் தகவல் தெரிவித்தது.

“2012 அல்லது 2013ல் அடுத்த பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு முன்னதாக அன்வாருடைய முறையீடுகளை நீதிமன்றங்கள் விசாரிக்கும். நிராகரிக்கும்,” என்றும் அது கூறியது.

அந்த சூழ்நிலை வழக்கு தொடங்கிய சில மாதங்களுக்கும் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புத்ராஜெயாவைக் கைப்பற்றப் போவதாக அன்வார் காலக் கெடு விதித்த பின்னரும் முக்கிய பங்காற்றியதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை என கீய்த் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்புக்கும் அன்வாருக்கும் இடையில் “தனிப்பட்ட முறையில் பகைமைப் போக்கு” நிலவுவதை நினைவு  கூர்ந்த அமெரிக்கத் தூதர், எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு அன்வார் முக்கியமானவர் என்னும் ஒரே ஒரு காரணத்தினால் அந்த சூழ்நிலை உண்மையெனத் தோன்றுகிறது.

மூன்று அரசியல் சூழ்நிலைகள்

அம்பலப்படுத்தப்பட்ட அந்தத் தகவல், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சாத்தியமான மூன்று அரசியல் சூழ்நிலைகளையும் தெரிவிக்கிறது.

முதலாவது சூழ்நிலை “என்ன விலை கொடுத்தாவது” அன்வாரைத் தண்டிப்பதற்கு அரசாங்கம் முயலும்.

இரண்டாவது சூழ்நிலை அரசாங்கம் வழக்கைத் தொடரும் ஆனால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு தேவை இல்லாத அழுத்தத்தைக் கொடுக்காது.

 நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஆதாரங்களும் விசாரணைகளும் அன்வாருடைய தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என அரசாங்கம் நம்பும் போது  அது நடக்கலாம் என கீய்த் சொன்னார்.

“போதுமான ஆதாரங்களுடன் அன்வார் தண்டிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பினாலும் எல்லா முறையீடுகளும் செவிமடுக்கப்பட்ட பின்னர் அன்வார் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்படக் கூடிய அபாயத்தையும் ஏற்றுக் கொள்கிறது.”

“அன்வார் விடுதலை செய்யப்பட்டாலும் அரசாங்கத்துக்கு சாதகமாக மக்களைத் திருப்புவதற்கு போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு விட்டன என்னும் ஊகத்தின் அடிப்படையில் அந்தச் சூழ்நிலை அமைந்துள்ளது,” என அமெரிக்கத் தூதர் சொன்னார்.

“அன்வாருக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதாரங்கள் பற்றித் தெளிவாகத் தெரியாததால் அந்த சூழ்நிலையின் விளைவுகளை கணிப்பது சிரமமாகும்.”

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாத விடுதலை

அந்த பெர்மாத்தாங் எம்பி-க்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கம் மீட்டுக் கொள்வது மூன்றாவது சாத்தியமான சூழ்நிலை என்றும் கீய்த் குறிப்பிட்டுள்ளார்.

தொடருவதற்குப் போதுமான வலு இல்லாதது, ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் பாதிப்புக்களைக் கொண்டுள்ளது அல்லது அன்வார் மருட்டல் குறைந்து விட்டது என நஜிப்பும் ஆளும் அம்னோ வர்க்கமும் எண்ணும் போது அது நிகழலாம்.

“குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாத விடுதலை என்னும் கூற்று, எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் வழக்கிற்கு அரசாங்கம் புத்துயிரூட்ட முடியும் என வழக்குரைஞர்கள் சொல்கின்றனர். அதனால் அன்வார் மீது பிடி எப்போதும் இருக்கும்,” என கீய்த் சொன்னார்.

இரண்டாவது ஆண்டில் நுழைந்துள்ள அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும். பிரதிவாதித் தரப்புச் சாட்சிகள் தொடர்ந்து சாட்சியம் அளிப்பார்கள்.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் தமது முன்னாள் அரசியல் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.