பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்குக்கரையோர விரைவுச்சாலை ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சட்டத்துறைத் தலைவரைப்(ஏஜி) புறக்கணிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள டிஏபி, சாலைப் பராமரிப்புச் சலுகையைப் பெற்றுள்ள அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள வேறுபல சலுகைகள், ஊக்குவிப்புகள் பற்றியும் எதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டன என்பது பற்றியும் முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
“நஜிப்(அப்துல் ரசாக்),பேசுவதுபோல் நடந்துகாட்ட வேண்டும்.கடந்த மூன்றாண்டுகளாக அவரது நிர்வாகம் வெளிப்படைத்தன்மை பற்றியும் பொறுப்புடைமை பற்றியும் பேசிவருவதைச் செயலில் காட்ட வேண்டும்”, என்று டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவு செயலாளர் டோனி புவா இன்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆங்கில நாளேடான த மலாய் மெயிலில் நேற்று வெளிவந்திருந்த செய்தியொன்று, ஏஜி அப்துல் கனி அத்திட்டம்மீதான ஒப்பந்தக் கூறுகள் பொதுநலனுக்கு உகந்தவை அல்ல என்று கருதுவதாகத் தெரிவித்திருந்தது.
‘அதில் உள்ள நிபந்தனைகள் சாலை ஒப்பந்த நிறுவனமான கும்புலான் ஈரோபிளஸ் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான டபல்யுசிஇ சென்.பெர்ஹாட்டுக்கே மிகவும் சாதகமாக இருப்பதாய் கனி கருதுகிறார்’ என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறிற்று.
‘அப்துல் கனி(வலம்),சிலாங்கூரில் பந்திங்கையும் பேராக்கில் தைப்பிங்கையும் இணைக்கும் அந்த 316கிமீ-நீள நெடுஞ்சாலை குறித்துத் தம் கருத்தைப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு, மலேசிய நெடுஞ்சாலை வாரியம், நிதி அமைச்சு, பொதுப்பணி அமைச்சு ஆகியவற்றிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்’.
அதில் கையொப்பமிடுமாறு மிகுந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்தக் கூறுகளை மறு ஆய்வு செய்ய விரும்புவதாக ஏஜி சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கூறிவிட்டாராம்.
அச்செய்தி அறிக்கைமீது எதிர்வினையாற்றியுள்ள புவா, அரசாங்கம் புதிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை நேரடிப் பேச்சுகள்வழி கும்புலான் ஈரோபிளஸுக்கு வழங்குவதில் பிடிவாதம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கான செலவு முதலில் நினைத்ததைவிட இப்போது பன்மடங்காகி விட்டது.
“2007-இல்,டெண்டர் அழைக்கப்படாமல் அந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டபோது அதற்கு ரிம3.0பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பின்னர் அரசாங்கத்துக்கும் அந்நிறுவனத்துக்கும் பேச்சு நடந்து கடந்த மாதம் அந்த ஒப்பந்தம் மீண்டும் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டபோது திட்டத்துக்கான செலவு ரிம7.1பில்லியனாக கூடிவிட்டது”, என்று புவா குறிப்பிட்டார்.
“அத்துடன், முதலில் 33 ஆண்டுகளுக்கு மட்டும்தான் சாலைப் பராமரிப்புச் சலுகை என்று கூறப்பட்டது.இப்போது சலுகைக் காலமும் 60ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது”.
இதுபோக, அரசாங்கம் ரிம2.24பில்லியன் ரிங்கிட்டை எளிய-நிபந்தனை கடனாக அந்நிறுவனத்துக்குக் கொடுப்பதுடன் அதன் வணிகக் கடன்களுக்கான வட்டிக்கு மூன்று-விழுக்காடு உதவித்தொகையும் வழங்கும் என்றாரவர்.
தவிர, திட்டத்துக்காக அகப்படுத்தப்படும் நிலங்களை வாங்குவதற்கும்-ரிம1பில்லியன் என மதிப்பிடப்படுகிறது- அரசாங்கமே பணம் கொடுக்கும்.
செலவுமிக்க தவறுகளைத் தவிர்க்க வேண்டும்
அப்துல் கனி தம் அதிகாரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த ஒப்பந்தம் நியாயமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் தனியார்மயமாக்கல் திட்டங்களில் வழக்கமாக ஏற்படும் செலவுமிக்க தவறுகள் மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்கவும் முனைய வேண்டும் என்று புவா(இடம்) கேட்டுக்கொண்டார்.
“இதில் அதிர்ச்சிதரும் உண்மை என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக நிதி அளவில் திறம்பட செயல்படாதிருக்கும் ஒரு நிறுவனத்துக்கு இத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.2010-இலும் 2011-இலும் கும்புலான் ஈரோபிளஸின் வருமானமே முறையே ரிம50மில்லியன்,ரிம28மில்லியன்தான்.
“இவ்வளவு குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு ரிம7.1பில்லியன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது”.
கும்புலான் ஈரோபிளஸுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் வழங்கப்பட்டது பற்றியும், திட்டத்துக்கான செலவு அதிகரித்துள்ளது ஏன் என்றும் எந்த அடிப்படையில் எளிய நிபந்தனைகளில் கடன் வழங்கப்படுகிறது என்பதையும் சாலைப்பராமரிப்பு சலுகை யில் 27ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதற்கான காரணத்தையும் நஜிப் ஒளிவுமறைவு இல்லாமல் விளக்கிட வேண்டும் என்று புவா கோரிக்கை விடுத்தார்.
முக்கியமாக எவ்வளவு சாலைக்கட்டணம் விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.